தமிழக அரசே – தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொலைக்காட்சி ஒன்றை அமைத்து தமிழ் செய்தி சேனல்களை ஒளிபரப்பி ஊழல், லஞ்சம் உள்ளிட்ட எந்த ஒரு முறைகேடும் நடைபெறாமல் இருக்கவும், பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட எந்த ஒரு முறைகேடும் நடைபெறக் கூடாது என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதாவது அரசு அலுவலகங்கள் (Government Offices) என்பது குடிமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கவும், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ள அரசு அமைப்புகளாகும்.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுத் துறைகள் வாயிலாக பல்வேறு பணிகளும், சேவைகளும் நிர்வகிக்கப்படுகின்றன.
கல்வி மற்றும் திறன் மேம்பாடு, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் சமூக நலம், நிதி மற்றும் நிர்வாகம், சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுப்பணி, தொழில், வணிகம் மற்றும் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் குடிமைப் பணிகள், வருவாய் மற்றும் பதிவு, தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பல துறைகள் மூலம் மக்களுக்கான பணிகள், சேவைகள் நடைபெறுகின்றன.
ஆனால் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அது தொடராமல் இருக்க வேண்டும் என்பது தான் சாமானிய மக்களின் எண்ணமாகும்.
அப்படி என்றால் கிராமம் முதல் பெருநகரம் வரை உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றிலும் அரசின் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மிக மிக அவசியம். ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் தொலைக்காட்சி மற்றும் சிசிடிவி கேமரா வசதிகள் இல்லை. இருந்தாலும் சரிவர செயல்படவில்லை என பொது மக்கள் குறை கூறுகின்றனர்.
எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொலைக்காட்சி ஒன்றை அமைத்து தமிழ் மொழி செய்தி சேனல்களை ஒளிபரப்பி, சிசிடிவி கேமராவை வைத்து – ஊழல், லஞ்சம் உள்ளிட்ட எந்த ஒரு முறைகேடும் நடைபெறாமல் இருக்கவும், பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்குமான பணிகள் தங்கு தடையில்லாமல் முறையாக காலத்தே நடைபெறும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
