இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), மருத்துவப் புத்தாக்கக் காப்புரிமை மித்ரா முன்முயற்சியின் கீழ், மூன்று உள்நாட்டு உயிரி மருத்துவ தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வணிகமயமாக்குவதற்காக முன்னணி இந்திய மருந்து நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது. இதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு முந்தைய நிலையைக் குணப்படுத்துவதற்கான எஸ்ஹெச்இடிஏ2 என்ற புதிய சிகிச்சைத் தொழில்நுட்பத்திற்கான உரிமம் எம்கியூர் மருந்து நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாக்டீரியா தொற்றுகள் பற்றிய ஆராய்ச்சிக்கான கொல்கத்தாவில் உள்ள தேசிய நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட குடல் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான இரண்டு அடுத்த தலைமுறை தடுப்பூசித் தொழில்நுட்பங்களுக்கான உரிமம் பயோலாஜிக்கல் ஈ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் மருத்துவப் புத்தாக்கச் சூழலை வலுப்படுத்துவதற்கு இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். எஸ்ஹெச்இடிஏ2 தொழில்நுட்பம் ஆரோக்கியமான செல்களைப் பாதிப்புக்குள்ளாக்காமல், புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் புற்றுநோய் செல்களை மட்டும் இலக்கு வைத்து அழிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் பாதுகாப்பான, குறைந்த செலவிலான சிகிச்சையை வழங்க முடியும். அதுபோல, புதிய தடுப்பூசித் தொழில்நுட்பங்கள் டைபாய்டு, ஷிகெல்லா போன்ற குடல்சார் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக விரிவான பாதுகாப்பை அளிக்கும். அரசு நிதியுதவி பெறும் ஆராய்ச்சிகள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சுகாதார ஆராய்ச்சித் துறைச் செயலாளரும் ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா
