ஒடிசாவின் புதிய கடலோர நெடுஞ்சாலை: ஆன்மீகப் பயணங்களுக்கும் கடலோர சுற்றுலாப் புரட்சிக்கும் ஓர் நுழைவாயிலாக அமையும்.

புதிய ராமேஸ்வர்–பாரதீப் கடலோர நெடுஞ்சாலை அமைக்கப்படுவதால் ஒடிசாவின் கடற்கரை பெரும் மாற்றத்தைக் காணவிருக்கிறது. 160.18 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம், மாநிலத்தின் கடலோரப் பகுதி முழுவதற்குமான இணைப்பை மறுவரையறை செய்யும். இந்தத் திட்டத்தை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ரூ. 8,300.79 கோடி மூலதனச் செலவில் செயல்படுத்தும். இந்த நெடுஞ்சாலை குர்தா, பூரி, கேந்திரபடா, ஜகத்சிங்பூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று, முக்கியமான கலாச்சார, சமய, சுற்றுலா மற்றும் பொருளாதாரத் தலங்களுக்கு இடையே தடையற்ற இணைப்பை உருவாக்கும்.

வேகமான, பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், ராமேஸ்வரிலிருந்து கோனார்க் வரை 4-வழி நெடுஞ்சாலையும், கோனார்க்கிலிருந்து பாராதீப் வரை தார் போடப்பட்ட 2-வழி நெடுஞ்சாலையும் அடங்கும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கும். இந்த வழித்தடப் பணி முடிக்கப்பட்டதும், ராமேஸ்வர் – பாரதீப் இடையேயான பயண நேரம் சுமார் 2 மணி 30 நிமிடம் குறைத்து, பயணிகள் போக்குவரத்தையும் சரக்கு இணைப்பையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய கடலோர நெடுஞ்சாலை, ஒடிசாவின் மிகவும் புகழ்பெற்ற சில ஆன்மீகத் தலங்களுக்கு விரைவான அணுகலை உருவாக்குவதால், சமய, கலாச்சார சுற்றுலாவிற்கு முக்கிய உந்துசக்தியாக அமையும்.

இந்த வழித்தடம், பூரியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயம், வரலாற்றுச் சிறப்புமிக்க கோனார்க் சூரியக் கோயில், புகழ்பெற்ற ராம்சண்டி கோயில் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் ஒடிசாவுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் புனிதப் பயணங்களை மேலும் வசதியாக மாற்றும்.

ராமேஸ்வர்–பாரதீப் வழித்தடம், ஒடிசாவின் கிழக்குக் கடலோரம் உள்ள கடற்கரைகள், பாரம்பரியத் தளங்கள், பல்லுயிர் பெருக்க மையங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை இணைக்கும் புதிய கடலோர சுற்றுலா நுழைவாயிலாக அமைய உள்ளது.

Leave a Reply