நாடாளுமன்றத்தில் 2026-ம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்பாக, பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகவியலாளர்களிடையே உரையாற்றினார். புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் பங்கேற்பவர்களை வரவேற்ற பிரதமர், நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக செயல்திறன் மிக்க, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நடவடிக்கைகளின் வலிமையான தாக்கத்தை வலியுறுத்தினார். அனைவருக்கும் நலன் பயக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மழைக்காலமும், மழைக்கால கூட்டத் தொடரும் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக திரு மோடி கூறினார்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தேசிய சர்வதேச அளவில் நடைபெற்ற தொடர்ச்சியான சிறப்பான சாதனைகள் குறித்து எடுத்துரைத்த பிரதமர் உலகளவில் நாட்டின் நிலை உயர்ந்து வருவது பெருமை அளிப்பதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு கூட்டத்தொடருக்கு முன்பாக ஒரு இந்தியர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை நினைவுகூர்ந்த அவர், ஸ்கைரூட் என்னும் தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனம் அண்மையில் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை கொண்டாடுவதாக கூறினார். சராசரியாக 28 வயதுடைய ஒரு குழு தனியார் விண்வெளி ஆய்வுக்கான புதிய காலகட்டத்திற்கு நாட்டை கொண்டுசென்றதாக பாரட்டினார். இதுபோன்ற சாதனைகள் நாட்டின் தன்னம்பிக்கையை எவ்வாறு சிறப்பாக மேம்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். நமது இளைஞர்களால் வழிநடத்தப்படும் இந்த புத்தொழில் நிறுவனங்கள் விண்வெளியில் இந்தியக் கொடியை உறுதியாக நாட்டியுள்ளனர் என்றும் இதன்மூலம் நமது நாட்டின் செயல் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும் திரு மோடி குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சாதனைகளை நாட்டின் எல்லையற்ற திறனுக்கான விரிவான அடையாளங்களாக குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய தலைமுறையினரின் திறன்கள் தடைகளற்றது என்று தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகள் நாடு முன்னோக்கி செல்வதற்கான உத்வேகமாக திகழ்கிறது என்று கூறினார். நமது இளைஞர்களின் திறனும் லட்சியமும் விண்வெளியைப் போல எல்லையற்றவை என்பதற்கு இது ஒரு வலுவான செய்தி என்று திரு மோடி தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத இந்த தொழில்முனைவோரின் வெற்றிகளுக்கான அடிப்படைக் காரணம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், அரசின் விரைவான, மாற்றத்தக்க கொள்கை மாற்றங்களே இதற்கு காரணம் என்று கூறினார். இதுபோன்ற முன்னேற்றமிக்க சூழல் இளம் புதுமை கண்டுபிடிப்பாளர்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வெற்றியடைய நேரடியாக உதவுவதாக குறிப்பிட்டார். இது நாட்டின் தற்போதைய சீர்திருத்த பயணத்தின் விளைவு என்றும், இதன்மூலம் நமது இளைஞர்கள் இதுபோன்ற துணிச்சலையும் வெற்றியையும் பெற இயலும் என்று திரு மோடி தெரிவித்தார்.
திவாஹர்
