புகையிலை வணிகத்தில் நடைபெற்றுவரும் வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், பாட்னா மண்டல சரக்கு, சேவை வரி புலனாய்வு இயக்குநரக (டிஜிஜிஐ – DGGI) அதிகாரிகள் ரூ.88 கோடிக்கு மேல் சரக்கு, சேவை வரிப் (ஜிஎஸ்டி) பணத்தை மோசடியாகப் பெற்ற கும்பலைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கும்பல் போலி நிறுவனங்களின் பெயரில் செயல்பட்டுள்ளது. புகழ்பெற்ற நிறுவனங்களின் சிகரெட் விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்காமலேயே போலி ரசீதுகளைப் பெற்றுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி தகுதியற்ற உள்ளீட்டு வரிப் பலனை மோசடியாகப் பெற்றுள்ளது.
மேலும், தரமற்ற சிகரெட்டுகளை வாங்கி, கொல்கத்தாவில் உள்ள ஃபால்டா சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு ஏற்றுமதி செய்வதாகக் கூறி அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறும் கோரிக்கைகளை அந்தக் கும்பல் சமர்ப்பித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.88 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி பணத்தை இந்தக் கும்பல் மோசடியாகப் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஃபால்டா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நடத்தப்பட்ட சோதனையில், புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட போலி, தரமற்ற சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 8.76 கோடி சிகரெட்டுகள், அதாவது 8,410 அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.150 கோடிக்கும் அதிகமாகும். அவற்றை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத சிகரெட் தயாரிப்பு, ரகசிய விற்பனை, போலி வரிச் சலுகைகள் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட கும்பல்கள் மீதும் டிஜிஜிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டு சட்டவிரோத சிகரெட் தயாரிப்பு ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு சுமார் 25 லட்சம் சிகரெட்டுகள், மூன்று தயாரிப்பு, பொட்டலமிடும் இயந்திரத் தொகுப்புகள் கைப்பற்றப்பட்டன.
நடப்பு நிதியாண்டில் இதுவரை சிகரெட் தயாரிப்பு, விநியோகம் தொடர்பாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10.07 கோடிக்கும் அதிகமான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.160 கோடிக்கும் அதிகமாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி மோசடித் தொகை ரூ.110 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடைய நிறுவனங்கள், நபர்கள் குறித்தும், முழுமையான வரி இழப்பு குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எம்.பிரபாகரன்
