உள்நாட்டு மருத்துவ ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், குறைந்த செலவிலான நவீன சிகிச்சைகள் ஆகியவை மூலம் உலக அளவில் சுகாதாரத் துறையில் வலிமைமிக்க நாடாக இந்தியா வளர்ந்து வருவதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உலகளாவிய சுகாதார மாநாட்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் போன்றவை மருத்துவத் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், மருத்துவர்களின் நேரடி பரிசோதனை, நோயாளிகளுடன் உரையாடுதல், மருத்துவ அனுபவம் ஆகியவற்றுக்கு தொழில்நுட்பம் மாற்றாக இருக்க முடியாது என்று அவர் கூறினார். மருத்துவக் கல்வியில் நடைமுறைப் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய மரபணுத் இயக்கத்தின் கீழ், 10,000 முதல் 15,000 பேரின் மரபணுக்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை பத்து லட்சமாக உயர்த்துவதே தொடக்க இலக்கு என்றும் அவர் கூறினார். இதன் மூலம் தனிநபரின் உடல்நிலைக்கு ஏற்ற சிகிச்சைகளை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் இளம் வயதினரிடையே சர்க்கரை நோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு ஆகியவை அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவத் துறையில் இந்தியாவின் சாதனைகளையும் அவர் எடுத்துரைத்தார். 50 லட்சத்துக்கும் அதிகமான இளம் பெண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டு புதிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் வழங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் நோயாளிகளுக்கான நிதிப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மருத்துவ மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, மரபணு ஆராய்ச்சி போன்ற புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதே நேரத்தில் நோயாளிகளை நேரடியாகப் பரிசோதிக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்தியாவின் இளம் மருத்துவர்கள் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், நோயாளிகளுக்கான சேவை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்காற்றி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உதவுவார்கள் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
திவாஹர்
