காமராஜர் துறைமுக நிறுவனத்தில் இரண்டாவது சரக்கு பெட்டக முனையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

காமராஜர் துறைமுக நிறுவனத்தில் பொது, தனியார் கூட்டாண்மை முறையில் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்கம், பரிமாற்றம் அடிப்படையில் இரண்டாவது சரக்குப் பெட்டக முனையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் 900 மீட்டர் நீளமுடைய சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும். இதனால் ஆண்டுக்கு 2.0 மில்லியன் டிஈயு அலகுகளைக் கொண்ட சரக்குப் பெட்டகங்களை கையாள முடியும்.

திட்டத்திற்கான செலவுகள்:

பொது – தனியார் பங்களிப்புடன் கூடிய இத்திட்டத்தின் மொத்த செலவு ஜிஎஸ்டி உட்பட ரூ.4,288.26 கோடியாகும். இதில் முதல் கட்டத்திற்கு ரூ.2,429.32 கோடியும், இண்டாம் கட்டத்திற்கு ரூ.1,858.94 கோடியும் செலவிடப்படும்.

வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்கம், பரிமாற்றம் ஆகியவற்றின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் ஒப்பந்ததாரர் அதற்கான முதலீட்டை செய்ய வேண்டும். அத்துடன் திட்டத்தின் ஒரு பகுதியாக, தூர்வாருதல் பணிக்கு ரூ.450 கோடி செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இச்செலவை காமராஜர் துறைமுக நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

விவரங்கள்:

இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2.0 மில்லியன் டிஈயு அலகுகளைக் கொண்ட சரக்குப் பெட்டகங்களை கையாளும் வகையில் 900 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட இரண்டாவது சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply