ஒடிசாவின் கட்டாக் நகரில் நடைபெற்ற பாலி யாத்ரா திருவிழா 2026-ல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு.

இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள், இன்று (நவம்பர் 24, 2026) ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற பாலி யாத்ரா திருவிழா 2026-ல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஒடிசாவின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடும் தனித்துவமான திருவிழாவாக பாலி யாத்ரா விளங்குகிறது என்று தெரிவித்தார். கடல்வழி வணிகத்தின் வரலாறு ஒரு பாரம்பரியமாக வளர்ந்து, அந்தப் பாரம்பரியம் இன்று திருவிழாவாக மாறியுள்ளது. இது ஒடிசா மக்களின் படைப்பாற்றலையும் வரலாற்று நோக்கையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

ஒடிசாவைச் சேர்ந்த வணிகர்கள் ஒரு காலத்தில் தொலைதூர நாடுகளுக்குச் சென்று வணிகம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் நாட்டிற்குப் பல முக்கியமான சாதனைகளைப் படைத்தனர். புதிய கடல்வழிப் பாதைகளைக் கண்டறிந்ததுடன், சர்வதேச உறவுகளை வலுப்படுத்தினர். மேலும், பல்வேறு நாடுகளுக்கு இடையிலான கலாசாரப் பரிமாற்றத்திற்கும் அவர்கள் பாலமாக விளங்கினர் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

ஒடிசாவுக்கும் பாலிக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளை நவீன காலத்திற்கேற்ப வர்த்தக மற்றும் கலாசார ஒத்துழைப்பாக மாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பாலி யாத்ரா விழாவில் இந்தோனேசியாவைச் சேர்ந்த கலைக்குழுக்கள் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். ஒடிசாவின் நடனம், இசை, கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தோனேசியாவின் பாலி நகரில் இரண்டு நாட்கள் ஒடிசா திருவிழா கொண்டாடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய கலாசாரப் பரிமாற்றங்கள் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலத்தின் பெருமைகளைப் போற்றுவதும், நமது திருவிழாக்களைக் கொண்டாடுவதும் நல்லதுதான். ஆனால், கடந்த காலத்திலிருந்து உத்வேகம் பெற்று நிகழ்காலத்தைச் செம்மைப்படுத்தி, எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, இளம் தலைமுறையினர் நமது வணிகர்களின் துணிச்சல் மற்றும் திறமையிலிருந்து ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விக்சித் பாரத் இலக்கு

வளர்ச்சியடைந்த பாரதத்தை (விக்சித் பாரத்) உருவாக்குவதே நமது தேசிய இலக்காகும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பும் அந்தஸ்தும் உயர்ந்துள்ளது.

உலகின் பல பகுதிகளில் அமைதியின்மையும், உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையும் நிலவி வரும் சூழலிலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக இருந்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நமது பயணத்திற்கு இது நம்பிக்கையளிக்கும் அறிகுறியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒடிசா மாநிலம் தொழில்துறை மையமாக வளர்ந்து வருவதும், அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களை ஈர்த்து வருவதும் மகிழ்ச்சியளிப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

ஒடிசாவின் தொழில்முனைவோர், கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது திறமைகள் மற்றும் தொழில் முனைவு உணர்வின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் வளர்ந்து வரும் பங்களிப்பு, வளர்ச்சியடைந்த ஒடிசா என்ற இலக்கை அடைவதற்கான முன்னேற்றத்தின் நம்பிக்கையளிக்கும் அடையாளமாகத் திகழ்கிறது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

Leave a Reply