2047-ஆம் ஆண்டுக்குள் இந்திய உயிர்ப் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர இலக்கு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு!

புதுடெல்லி, நவம்பர் 21: இந்தியாவின் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கக் கவுன்சிலான (BRIC), 2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய உயிர்ப் பொருளாதாரத்தை 300 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2047-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்ற BRIC அமைப்பின் நான்காவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய அவர், இந்தியாவின் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களை ஒருங்கிணைத்தது, அரசு நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பில் ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் உயிர்ப் பொருளாதாரம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து தற்போது 195 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாகவும், அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆராய்ச்சிகளை நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல், தொழில்துறை நிறுவனங்களுடன் கூட்டாண்மையை வலுப்படுத்துதல் மற்றும் இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

BRIC அமைப்பின் கீழ் சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, புதிய மருந்துகள், நோய் கண்டறியும் கருவிகள், காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வேளாண்மை மற்றும் நிலையான உயிரியல் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது 11,000-க்கும் மேற்பட்ட உயிரித் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்கள் (Biotech Startups) செயல்பட்டு வருவதாகவும், இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அமைச்சர் ஊக்குவித்தார்.

மேலும், BRIC அமைப்பின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான விதிமுறைகளை உள்ளடக்கிய கையேட்டையும் அமைச்சர் வெளியிட்டார்.

2047-ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் இலக்கை அடைவதில் உயிரித் தொழில்நுட்பத் துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பின் மூலம் அதன் பலன்கள் விவசாயிகள், நோயாளிகள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply