பீகாரில் 19.39 கிலோ யானைத் தந்தங்கள் பறிமுதல் – 4 பேர் கைது!

இந்தியா – நேபாள எல்லைக்கு அருகே பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில், சட்டவிரோதமாக யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மற்றும் பீகார் மாநில காவல்துறையினர் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின்போது, இருசக்கர வாகனங்களில் பயணித்த நான்கு பேரை அதிகாரிகள் நேற்று வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது, சந்தேக நபர்களில் ஒருவர் வைத்திருந்த பையில் யானைத் தந்தங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதிகாரிகளைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றதுடன், அவர்களது நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்த நான்கு பேரையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மொத்தம் 19.39 கிலோ எடையுள்ள யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-இன் தொடர்புடைய விதிகளின்படி கைப்பற்றப்பட்டன.

யானைகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை-I-ன் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினங்களாகும். மேலும், அழிந்து வரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான ஒப்பந்தத்தின் (CITES) இணைப்பு-I-லும் இடம்பெற்றுள்ளன. இந்தியச் சட்டத்தின்படி யானைத் தந்தங்களின் வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத யானைத் தந்தக் கடத்தல், யானைகளின் பாதுகாப்புக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுப்பதற்கும், இத்தகைய கடத்தலில் ஈடுபடும் குற்ற வலையமைப்புகளை ஒழிப்பதற்கும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply