புதுடெல்லியில் இன்று (நவம்பர் 26, 2026) உச்ச நீதிமன்றம் சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய மக்கள் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூர்ந்தார். டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, 2015ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
நீதித்துறையின் சுதந்திரத்துடன் பொறுப்புணர்வும் இணைந்திருப்பது அதன் செயல்பாட்டிற்கு வலிமை சேர்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குவது நீதியின் அடிப்படை அம்சமாகும் என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க தொழில்நுட்ப வசதிகள், எளிமையான நடைமுறைகள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
