மூத்த பெண் அதிகாரிக் கொடுத்த துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பானப் புகாரில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் கைது! – தமிழ்நாடு காவல்துறை அறிக்கை.

23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரிஷ்டி சிங், IPS அவர்கள், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) திருமதி. என். காமினி, IPS அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார். விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply