கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி உள்பட 17 கைதிகள் தப்பிய விவகாரம்! தேனி மாவட்ட சிறை நிர்வாகம் சொல்லும் கதை நம்பும்படியாக இல்லை! – 9 சிறை காவலர்கள் சஸ்பெண்ட்! சிறை விதிமுறைகளும்; காவலர்களின் கடமைகளும்! -விரிவான ஆய்வு.

சிறையில் இருந்து தப்பிய கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி கைதி லிங்க பிரசாத்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையிலிருந்து கால் நடக்க முடியாத ஒரு மாற்று திறனாளி உள்பட, 17 சிறை கைதிகள் தப்பி ஓடிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தென் மண்டல காவல்துறையினரின் தூக்கத்தைத் தொலைத்துள்ளது. தலைமறைவானச் சிறைக் கைதிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்திப் பதிவேற்றம் செய்யும் இந்த நிமிடம் வரை நடக்க முடியாத மாற்றுத்திறனாளி கைதி உள்பட 5 சிறைக் கைதிகளை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட சிறைத் துறையினர் சொல்லும் கதை நம்பும்படியாக இல்லை. இதையடுத்து ஒன்பது சிறைக் காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய இந்த விவகாரம் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தையும், முதலமைச்சரையும் அக்கினி வார்த்தைகளால் அபிஷேகம் செய்து வருகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்கள் கடமைகளை நேர்மையாக செய்யாததின் விளைவு தான் இச்சம்பவத்திற்கு அடிப்படை காரணம். இனியும் இதில் மூடி மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே, கைப்புண்ணிற்கு கண்ணாடி தேட வேண்டிய அவசியம் இல்லை. இத்தகைய பாதுகாப்பு குறைபாடுகளை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. அரசுக்கு அவப் பெயரைத் தேடித் தந்திருக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் தொடர்ந்துக் கண்காணிக்க வேண்டும்.

சிறை விதிமுறைகளும்; காவலர்களின் கடமைகளும்!

தமிழ்நாடு சிறைத்துறையானது 1894 ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் சட்டத்தின் (Prisons Act, 1894) கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘மாதிரி சிறை விதிகள் 2016’-இன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட “தமிழ்நாடு சிறை விதிகள், 2024” (Tamil Nadu Prison Rules, 2024) என்ற புதிய விதிமுறைகளின் கீழ் தற்போது நிர்வகிக்கப்படுகிறது. 40 ஆண்டுகள் பழமையான 1983 ஆம் ஆண்டின் சிறை விதிகளை மாற்றி இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சிறைத்துறையின் முக்கிய விதிமுறைகளும் மற்றும் சிறைவாசிகளின் உரிமைகளும்!

1. முக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் புதிய விதிகள் (2024 திருத்தம்)

• சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்குத் தடை: சிறைச்சாலைகளில் சாதி ரீதியான பாகுபாடுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. கைதிகள் சேர்க்கப்படும் போது அவர்களின் சாதி விவரங்களைச் சேகரிக்கவோ, பதிவேடுகளில் பராமரிக்கவோ கூடாது.

• பணி ஒதுக்கீடு: கைதிகளுக்கு வழங்கப்படும் சிறை வேலைகள் (சமையல், துப்புரவு போன்றவை) அவர்களின் சாதி அடிப்படையில் பிரிக்கப்படாமல், முற்றிலும் சாதி-சார்பற்ற முறையில் ஒதுக்கப்பட வேண்டும்.

• கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யத் தடை: சிறைக்குள் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது அல்லது அபாயகரமான முறையில் கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

2. கைதிகளின் வகைப்பாடு

சிறையில் அடைக்கப்படும் கைதிகள் அவர்களது குற்றப் பின்னணி மற்றும் தண்டனையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள்:

• கைதிகளின் பிரிவுகள்: விசாரணைக் கைதிகள் (Undertrial), தண்டனைக் கைதிகள் (Convicts) மற்றும் சிவில் கைதிகள் (Civil Prisoners) எனப் பிரிக்கப்பட்டு தனித்தனிப் பிரிவுகளில் வைக்கப்படுகின்றனர்.

• வகுப்பு (Class) முறை: தண்டனை பெற்ற கைதிகள் அவர்களின் சமூக அந்தஸ்து, கல்வி மற்றும் வாழ்வாதார பின்னணியைப் பொறுத்து நீதிமன்றப் பரிந்துரையின் பேரில் ‘ஏ’ வகுப்பு (A Class) மற்றும் ‘பி’ வகுப்பு (B Class) கைதிகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

3. கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள்

• உணவு மற்றும் இருப்பிடம்: அனைத்துக் கைதிகளுக்கும் சுத்தமான தங்குமிடம், தரமான உணவு மற்றும் உடைகள் சிறை விதிமுறைகளின்படி வழங்கப்பட வேண்டும்.

• மருத்துவ வசதி: சிறை வளாகத்திற்குள்ளேயே மருத்துவக் கண்காணிப்பு மற்றும் அவசரச் சிகிச்சைக்கான மருத்துவ உதவிகள் பெற உரிமை உண்டு.

• சட்ட உதவி (Legal Aid): வறிய நிலையில் உள்ள கைதிகளுக்கு அரசு செலவில் இலவச சட்ட உதவி மற்றும் வழக்கறிஞர் வசதி செய்து தரப்படும்.

4. நேர்காணல் விதிகள் (உறவினர்கள் / நண்பர்கள் சந்திப்பு)

கைதிகளை அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கான விதிகள்:

• நேரக் கட்டுப்பாடு: அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, வார நாட்களில் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நேர்காணல் அனுமதிக்கப்படும்.

• நாட்கள் ஒதுக்கீடு: பொதுவாக, செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளையும்; திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விசாரணைக் கைதிகளையும் சந்திக்க நேரம் ஒதுக்கப்படுகிறது.

• அனுமதி: ஒரு முறை நேர்காணலின் போது அதிகபட்சமாக 3 நபர்கள் மட்டுமே கைதியைச் சந்திக்க அனுமதிக்கப்படுவர். ஒரு சந்திப்பிற்கு 30 நிமிடங்கள் வரை நேரம் வழங்கப்படும்.

5. பரோல் (Parole) மற்றும் முன்கூட்டியே விடுதலை

• விடுப்பு / பரோல் (Suspence of Sentence): கைதிகளின் நடத்தை, அவசரக் குடும்பச் சூழல் (மரணம், திருமணம், கடுமையான நோய்) ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்கள் பரோல் எனப்படும் தற்காலிக விடுப்பு வழங்கப்படும். இதற்கு பிணையாளர்களின் (Surety) முறையான உத்தரவாதப் பத்திரம் அவசியமாகும்.

• முன்கூட்டியே விடுதலை (Premature Release): நன்னடத்தை மற்றும் சிறையில் கழித்த ஆண்டுகளின் அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய புதிய விதிகளின் (விதி 348) கீழ் மாநில அளவிலான குழு பரிந்துரைக்கலாம். எனினும், போக்சோ (POCSO) சட்டம் மற்றும் கடுமையான பாலியல் குற்றங்களின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலையில் விதிவிலக்குகள் அளிக்கப்படாது.

6. சிறை ஒழுங்குமுறை மற்றும் தண்டனைகள்

• கைதிகளின் கடமைகள்: சிறை வளாகத்தைச் சுத்தமாக வைத்திருப்பது, சிறை விதிகளை மதிப்பது, தடை செய்யப்பட்ட பொருட்களை (Contraband) வைத்திருக்காமல் இருப்பது கைதிகளின் கடமையாகும்.

• விதிமீறல்களுக்கான தண்டனை: சிறை விதிகளை மீறுதல், வன்முறையில் ஈடுபடுதல் அல்லது உண்ணாவிரதம் இருத்தல் போன்ற செயல்களுக்கு சிறைக் கண்காணிப்பாளர் மூலமாக எச்சரிக்கை, தண்டனை குறைப்பு காலத்தை ரத்து செய்தல் (Loss of Remission) அல்லது தனிமைச் சிறை (Solitary Confinement) போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம்.

தமிழ்நாடு அரசு சிறைக் காவலரின் (Jail Warder / Prison Guard) முக்கியக் கடமைகள் மற்றும் பொறுப்புகள்: 

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு: சிறை வளாகத்தில் கைதிகளின் நடமாட்டத்தை கண்காணித்தல், தப்பியோடுவதைத் தடுப்பது மற்றும் சிறையின் பாதுகாப்பு விதிகளை உறுதி செய்தல். 

சோதனை செய்தல்: கைதிகள், அவர்களது அறைகள் மற்றும் சிறைக்கு வரும் பார்வையாளர்களை முறையாகச் சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பொருட்கள் (Contraband) அல்லது ஆயுதங்கள் உள்ளதா என கண்டறிதல். 

ஒழுக்கத்தைப் பராமரித்தல்: சிறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கைதிகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதும், விதிகளை மீறுவோர் குறித்து மேலதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பதும். 

பதிவேடுகளைப் பராமரித்தல்: கைதிகளின் வருகை, நடமாட்டம், அவர்களின் பணிகள், தினசரி நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்தல்.

அவசர கால நடவடிக்கை: சிறையில் தீ விபத்து, கைதிகளுக்கு இடையிலான மோதல், கலவரம் அல்லது திடீர் உடல்நலக் குறைவு போன்ற அவசர காலங்களில் உடனடியாகச் செயல்படுதல். 

கைதிகளை அழைத்துச் செல்லுதல்: கைதிகளை நீதிமன்றத்திற்கோ, மருத்துவமனைக்கோ அல்லது வேறு பாதுகாப்பான இடங்களுக்கோ முறையாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்புதல். 

சீர்திருத்தப் பணிகள்: கைதிகளின் நல்வாழ்வு மற்றும் சீர்திருத்த நிகழ்ச்சிகள், கவுன்சிலிங் அமர்வுகள் ஆகியவற்றில் உதவுதல். 

உணவு மற்றும் பராமரிப்பு: கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, தூய்மை மற்றும் மருத்துவ வசதிகள் சரியாகக் கிடைக்கிறதா என்பதை மேற்பார்வையிடுதல். 

மேல் குறிப்பிட்ட விதிமுறைகளையும் கடமைகளையும், முறையாகப் பின்பற்றி இருந்தால் தேனி மாவட்ட சிறையில் இந்த சம்பவமே நடந்திருக்காது.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் சிறைத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இரவு நேர பணிக்கு வரும் சீருடை பணியாளர்களில் சுமார் 20 சதவீதம் பேர் மது போதையில் தான் வருகிறார்கள். இவர்களை எல்லாம் கேள்வி கேட்க நாதியில்லை எனவே, இவற்றையெல்லாம் முறையாக கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் மக்கள் விரும்பும் மாற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்.

Leave a Reply