ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 40-ம் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மருத்துவ நிறுவனங்கள் ஆராய்ச்சியை வலுப்படுத்தவும், புதுமைக் கண்டுபிடிப்பை மேம்படுத்தவும், சுகாதாரம் சார்ந்த சவால்களுக்கான தீர்வுகளை உருவாக்கவும் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
டாக்டர் என்டிஆர்-ன் தொலைநோக்குப் பார்வையும், பொதுசேவையும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் நாட்டின் நலனுக்கான ஒரு பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலித்ததாக கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மருத்துவக் கல்வி விரிவுபடுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர் இந்தியாவில் 2014-ம் ஆண்டிற்கு முன்பு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில் தற்போது அது 846 என்ற எண்ணிக்கையில் இரு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். எம்பிபிஎஸ் இடங்கள் 51 ஆயிரத்திலிருந்து 1,40,000 அதிகமாக 172 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார். அதேபோல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் சுமார் 31,000-லிருந்து 86,000-க்கும் அதிகமாக 177 சதவீதம் கூடியுள்ளதாக குறிப்பிட்டார். ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பை நோக்கி அடுத்தக்கட்ட வளர்ச்சி இருக்க வேண்டும் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர் திறமைமிக்க மாணவர்கள் மனித சமூகம் எதிர்கொள்ளக்கூடிய சுகாதாரம் சார்ந்த சவால்களுக்கு தீர்வு காண்பதில் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ அறிவியலுக்குத் தங்களுடையப் பங்களிப்பின் மூலம் நோபல் பரிசு உள்பட உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் சுகாதாரம், தொலைதூர மருத்துவ சேவை, மேம்பட்ட நோய் கண்டறிதல் தொழில்நுட்பங்கள் ஆகியவை சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு மேம்பட்ட ஆராய்ச்சி, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் குறித்த கூடுதல் அனுபவத்தை அளிக்க முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்துச் செயல்படுமாறு அப்பல்கலைக்கழகத்தினரை ஊக்குவித்தார்.
போதைப்பொருளுக்கு எதிரான சமூகச் செயல்பாட்டில் மருத்துவர்கள் முன்னிலை வகிக்க வேண்டுமென்று குடியரசு துணைத்தலைவர் அழைப்பு விடுத்தார்.
திவாஹர்
