இந்தியக் கடற்படையின் பயிற்சிக் கப்பல்கள் கொழும்பு சென்றடைந்தது!

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிக் குழுவைச் சேர்ந்த ஐஎன்எஸ் திர், ஐஎன்எஸ் சுஜாதா ஆகிய போர்க்கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல்படையின் சாரதி கப்பலும் 2026 அக்டோபர் 26 அன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தன. கடற்படை இசைக் குழுவின் மரியாதையுடன் இலங்கை கடற்படை சார்பில் இக்கப்பல்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இத்துறைமுகப் பயணமும் தொடங்கியது. இப்பயணம் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான தொழில்சார்ந்த தொடர்புகளுக்கும், முதலாவது பயிற்சிக் குழுவில் கடற்பயிற்சி பெற்று வரும் பயிற்சி மாலுமிகளுடனான கலந்துரையாடல்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையின் கடற்படைப் பயிற்சி தலைமை இயக்குநர், கிழக்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ஆகியோர் கப்பலில் இருந்த பயிற்சி மாலுமிகளுடன் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடல் மாலுமிகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், தொழில்முறை கடற்படைப் பயிற்சிகள் குறித்த கண்ணோட்டங்களைப் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பளித்தது.

இத்துறைமுகப் பயணத்தின் போது, இரு கடற்படைகளையும் சேர்ந்த வீரர்கள் கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை மற்றும் பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இந்நடவடிக்கைகள் வீரர்கள் தங்களின் தொழில்சார் அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், ஒருவருக்கொருவர் நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டு உத்திகளைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதுடன், இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதலை வளர்த்து ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும்.

Leave a Reply