ஜம்முவில் ரூ.1,503 கோடி மதிப்பிலான பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அடிக்கல் நாட்டினார்.

கடந்த 12 ஆண்டுகளாக, உதம்பூர்-கத்வா-டோடா நாடாளுமன்றத் தொகுதிக்கு முன்னுரிமை அளித்து பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இப்பகுதியின் மிகவும் தொலைதூர, கடினமான மலைப்பகுதிகளில் சாலை இணைப்பு வசதி தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டங்களைப் பொறுத்தவரை, நாட்டின் முதல் மூன்று மாவட்டங்களில், உதம்பூர் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், இது அத்தொகுதியில், கிராமப்புற போக்குவரத்திற்கான இணைப்பு வசதிக்கு அளிக்கப்படும் தொடர் முன்னுரிமையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

உதம்பூர்-கத்வா-டோடா-கிஷ்த்வார் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் கீழ், 110 சாலைத் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றினார். திட்ட அறிக்கையின்படி, இந்த 110 சாலைகளும் மொத்தம் 598.455 கி மீ நீளம் கொண்டதாகும். இதற்கான அனுமதிக்கப்பட்ட தொகை ரூ 1,503.53 கோடியாகும். கத்வா, உதம்பூர், ராம்பன், டோடா, கிஷ்த்வார் ஆகிய மாவட்டங்களில், இந்த சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் 46,972 மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply