மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அகமதாபாத்தில் தனது நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று அகமதாபாத்தில், எனது நாடாளுமன்றத் தொகுதியில் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மகள்களுடன் புனித ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடினேன். டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசிகள் தேவைப்படுகின்றன. இது அவர்களது குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், எங்கள் அரசு அத்தகைய குழந்தைகள் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் இலவச இன்சுலின் வழங்கி வருகிறது. பல வளர்ந்த நாடுகள் கூட தற்போது இந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட முயற்சியை செயல்படுத்த முயன்று வருகின்றன. இது, ‘சேவை, கருணை, பாதுகாப்பு’ ஆகிய கொள்கைகளில் நரேந்திர மோடி அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி அனைத்து சிறுமிகளுக்கும் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் ஒளிமயமான எதிர்காலத்துடனும் வாழ வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசைப் பொறுத்தவரை, பொதுச் சேவை என்பது வெறும் பொறுப்பு மட்டுமல்ல எனவும் அது கருணைமிக்க ஆட்சியின் கொள்கையாகும் என்றும் கூறினார். நாட்டின் மகள்களின் ஆரோக்கியம் பாதுகாப்பாக இருக்கும்போதுதான் சமூகத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
திவாஹர்
