வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அசாம், மிசோரம் மாநிலங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளின்போது 76 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, இரண்டு பேர் போதைப்பொருள், மனநலனைப் பாதிக்கும் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் அசாம் ரைபில்ஸ் படையினர் உதவியுடன் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கடந்த 25-ம் தேதி அன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அசாம்-மணிப்பூர் எல்லைக்கு அருகே சில்சாரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லால்பானியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த லாரியை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்தச் சோதனையின்போது 56 கிலோ எடையுள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து கைப்பற்றினர்.
முன்னதாக, மிசோரம் மாநிலத்தில் ஐஸ்வால்-சம்பாய் சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஒரு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. போதைப்பொருட்களை கண்டறியும் கள பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இந்த இரண்டு கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எம்.பிரபாகரன்
