இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, தனது தொடர்ச்சியான லோகாயன் 26 என்ற கடல்கடந்த பயணத்தின் ஒரு பகுதியாக, போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் துறைமுகத்தில் தனது மூன்று நாள் பயணத்தை நேற்று (2026 ஆகஸ்ட் 25) நிறைவு செய்தது.
லிஸ்பன் துறைமுகப் பயணத்தின் போது, ஐஎன்எஸ் சுதர்ஷினியின் கட்டளை அதிகாரி, போர்த்துகீசிய கடற்படை அகாடமியின் தளபதியான ரியர் அட்மிரல் மிகுவல் பெஸ்ஸா பச்சேகோ, போர்ச்சுகல் கடற்படையின் துணைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜோவோ பாலோ சில்வா பெரேரா ஆகியோரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புகள் இரு கடற்படைகளுக்கும் இடையேயான உறவுகளையும் பரஸ்பர புரிதலையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தன. தொழில்முறை சந்திப்புகளின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படையைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் போர்ச்சுகல் கடற்படை அகாடமிக்குச் சென்றனர். அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வளாகம், பயிற்சி வசதிகள் ஆகியவற்றை அவர்கள் சுற்றிப் பார்த்தனர். மேலும் கப்பல் ஓட்டும் திறன், உயரமான பாய்மரக் கப்பல்களுக்கான பயிற்சி ஆகியவை குறித்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தத் துறைமுகப் பயணத்தின் போது, போர்ச்சுகல் ராணுவ அதிகாரிகள், தூதரக உறுப்பினர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும் கப்பலில் நடைபெற்றது.
ஐஎன்எஸ் சுதர்ஷினி, போர்ச்சுகலின் பொன்டா டெல்கடா, லிஸ்பன் துறைமுகங்களுக்கு மேற்கொண்ட பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நீடித்த கடல்சார் ஒத்துழைப்பை எடுத்துக் காட்டுகிறது.
திவாஹர்
