மத்திய விஸ்டா வழித்தடத்திற்கான மத்திய தலைமைச்செயலக மெட்ரோ ரயில் நிலையப் பணிகளை டிஎம்ஆர்சி தொடங்கியது.

மத்திய விஸ்டா வழித்தடத்திற்காக மத்திய தலைமைச்செயலக மெட்ரோ ரயில் நிலையத்தில் தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) இன்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், மின்சாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லால் இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமைச்சகத்தின் செயலாளர், உயரதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

ஜனக்புரி மேற்கு முதல் ஆர் கே ஆஷ்ரம் மார்க் வரையிலான தற்போதைய மெஜந்தா நிற வழித்தடத்தின் நீட்டிப்பாக, 5(ஏ) கட்டத்தின் கீழ் இந்த நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய தலைமைச் செயலக ரயில் நிலையம், புதிய மெஜந்தா நிற வழித்தடத்தை தற்போதைய மஞ்சள், ஊதா நிற வழித்தடங்களுடன் இணைக்கும் மூன்று வழி சந்திப்பு நிலையமாக மாறும். இந்தத் தனித்துவமான வசதி லுடியன்ஸ் மண்டலம், அதனைச் சுற்றியுள்ள நிர்வாக மாவட்டங்களை அணுகும் அரசு ஊழியர்கள், பயணிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும்.

சுரங்கம் வழியாக ஒன்பது நிலையங்களுடன் 9.913 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடம், அரசு அலுவலகங்கள், தேசிய நினைவிடங்களுக்குச் செல்வோருக்குச் சிறந்த வசதியை அளித்து, புதுதில்லியின் மையப்பகுதிக்கான இணைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்களிக்கும்.

Leave a Reply