பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் திரு கைடோ குரோசெட்டோவுடன் ஏப்ரல் 30, 2026 அன்று புது தில்லியில் உள்ள மனேக்ஷா மையத்தில் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். அமைதி, நிலைத்தன்மை, சுதந்திரம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் இந்தியா-இத்தாலி மூலோபாய கூட்டாண்மை அமைந்துள்ளது என்பதை இரு அமைச்சர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.
X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பாதுகாப்பு அமைச்சர், தானும் தனது இத்தாலிய சகாவும் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்டார். ஆத்மநிர்பர் பாரத் திட்டம் மற்றும் இத்தாலியின் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்முயற்சியின் கீழ், பரஸ்பரம் பயனளிக்கும் பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான இராணுவ நடவடிக்கைகளுக்கான பாதையை வகுக்கும் 2026-27 ஆம் ஆண்டுக்கான இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புத் திட்டம் இக்கூட்டத்தின் போது பரிமாறப்பட்டது.
குருகிராமில் உள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் ஒருங்கிணைப்பு மையம் மூலமான தகவல் பரிமாற்றம் உட்பட, பல்வேறு முக்கிய கடல்சார் பிரச்சினைகளில் இரு பண்டைய கடலோடி நாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பும் எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்திற்கு முன்னதாக, இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, தேச சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வருகை தந்த பிரமுகர், மனேக்ஷா மையத்தில் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஆய்வு செய்தார்.
எஸ்.சதிஸ் சர்மா
