இந்திய ரயில்வேயின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஜூன் 2026-ல் சென்ற ஆண்டைவிட 4 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் தொடர்ந்து வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. ஜூன் 2026-ல் 142.21 மில்லியன் டன் சரக்கு ஏற்றப்பட்டது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இருந்த 136.71 மில்லியன் டன் என்பதோடு ஒப்பிடுகையில் 4 சதவீத வளர்ச்சியாகும். சரக்குப் போக்குவரத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருவாயும், ஜூன் 2025-ஐ விட 3 சதவீதம் அதிகரித்து, ஜூன் 2026-ல் ரூ. 430 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி தேவை அதிகரிக்கும் நிலையில் நிலக்கரிப் போக்குவரத்தில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூன் 2026-ல் 7 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் தடையில்லா மின்சார உற்பத்திக்கு உதவி செய்துள்ளது.

பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை ஜூன் 2026-ல் 63.81 கோடி பயணிகளை இந்திய ரயில்வே ஏற்றிச் சென்றுள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் 62.37 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். புறநகர் மற்றும் புறநகர் அல்லாத பிரிவுகளிலும் பயணிகள் போக்குவரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பயணிகளுக்கான சேவைகளை நவீனமாக்கும் முயற்சியுடன் ஹவுரா-காமாக்கியா இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்தது உட்பட வந்தே பாரத் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே 164 ஆக உயர்த்தியுள்ளது. ஜூன் 2026-ல் 4 புதிய சேவைகள் தொடங்கப்பட்டதுடன், அமிரித் பாரத் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 72-ஐ எட்டியுள்ளது.

Leave a Reply