மக்கள்தொகை மாற்றங்கள் தொடர்பான உயர்மட்டக் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது.

மக்கள்தொகை மாற்றங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட ஆய்வுக் குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவை புதுதில்லியில் சந்தித்து கலந்துரையாடினர்.

மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த கள நிலவரத்தை நேரடியாக அறியும் வகையில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உயர்மட்டக் குழு முடிவு செய்துள்ளதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடனும் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தை ஆக்கப்பூர்வமானதாக மாற்றும் வகையில், முன்கூட்டியே தகவல்களைப் பெற விரிவான வினாப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் குழு தெரிவித்தது.

உயர்மட்டக் குழு வகுத்துள்ள செயல்திட்டத்தை பாராட்டிய அமைச்சர், குழுவின் அன்றாடப் பணிகள், கள ஆய்வுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு உள்துறைச் செயலருக்கு அறிவுறுத்தினார். குழுவின் பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோதக் குடியேற்றம், பிற அசாதாரண காரணங்களால் ஏற்படும் மக்கள்தொகை மாற்றங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, அதற்கேற்ற கொள்கை, சட்டம், நிர்வாக நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் நோக்கில் இந்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply