புத்தொழில், புத்தாக்கச் சூழலமைப்பை வலுப்படுத்துவதில் தொடர்ந்து இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்திய வர்த்தக-தொழில் சபைக் கூட்டமைப்பு, மெர்சிடிஸ்-பென்ஸ் பாரத் புத்தாக்கம், சவாலான வணிக யோசனைகள் திட்டத்தின் கீழ், காணொளி வாயிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது.
உற்பத்தி, நிலைத்தன்மை, கல்வி, கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், ஆட்டோமொபைல்/மின்சார வாகனங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில், புதுமையான, விரிவாக்கம் செய்யக்கூடிய தீர்வுகளை உருவாக்கும் அதிக ஆற்றல் கொண்ட இந்திய புத்தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து உதவிடும் நோக்கில், இந்திய வர்த்தக-தொழில் சபைக் கூட்டமைப்பு, மெர்சிடிஸ்-பென்ஸ் பாரத் புத்தாக்கம், சவாலான வணிக யோசனைகள் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு. அதீஷ் குமார் சிங், இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக இந்திய வர்த்தக-தொழில் சபைக் கூட்டமைப்பு, மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த முயற்சி, இந்தியாவின் புத்தாக்கச் சூழலமைப்பின் வளர்ந்து வரும் வலிமையையும், நாட்டின் இளம் தொழில்முனைவோரின் மகத்தான ஆற்றலையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். சரியான தருணத்தில் வழிகாட்டுதலையும், உதவியையும் வழங்குவதன் மூலம், தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப தீர்வுகளை உருவாக்க இத்திட்டம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். புத்தாக்க நடவடிக்கைகளால் வழிநடத்தப்படும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும், உலகளவில், முன்னணி நாடாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும், இத்தகைய கூட்டு முயற்சிகள் அவசியமானவை என்று அவர் மேலும் கூறினார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், முதலீட்டிற்குத் தயாராகும் தன்மையை மேம்படுத்துவதற்கும், நிதிக்குப் பிந்தைய வழிகாட்டுதல், உதவி வழங்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, முக்கிய வணிகம், ஒழுங்குமுறை, நிதி, சட்டம், முதலீடு, தொழில்நுட்பத் துறைகளில் இலக்கு சார்ந்த உதவிகளை வழங்கும். இதன் மூலம், புத்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கக்கூடிய, மீள்திறன் கொண்ட, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த நிறுவனங்களை உருவாக்க இயலும்.
திவாஹர்
