அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் காட்டு நெல் வகையில் மரபணு மூலங்கள் பாதுகாப்புத் திட்டத்திற்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மழைப்பிடிப்பு பகுதி ஆணையம் நிதியுதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் 2022 முதல் ஐசிஏஆர் – தாவர மரபணு மூலங்களுக்கான தேசிய குழுவின் மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் விஞ்ஞானிகள் குழுவினர் தேசிய மழைப்பிடிப்பு பகுதி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சந்திரசேகர் குமாரை சந்தித்து காட்டு நெல் கண்டுபிடிப்பு, பாதுகாப்பு, குணாம்சம் ஆகியவற்றில் இந்தத் திட்டத்தின் சாதனைகளை எடுத்துரைத்தனர்.
தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தால் சோனித்பூர் மாவட்டத்தின் போர்ஜூலி, பல்லுயிர் பெருக்க பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி அவரிடம் தெரிவித்தனர். ஆராய்ச்சிக் குழுவின் முயற்சிகளை பாராட்டிய டாக்டர் சந்திரசேகர் குமார், பருவநிலை மாற்றத்தை தாங்கவல்ல, உயர் விளைச்சல் கொண்ட, அதிக சத்துணவு கொண்ட அரிசி ரகங்களுக்கு காட்டு நெல் வகைகள், மதிப்புமிக்க பொருளாதார வளங்களை கொண்டிருப்பவை என்று அவர்களிடம் தெரிவித்தார்.
திவாஹர்
