குடிமக்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தற்போது ஆதார் செயலி வாயிலாக, நேரடியாக ஆதார் எண்ணுடன் தங்களது மின்னஞ்சல் முகவரியை இணைக்க அல்லது புதுப்பிக்க அனுமதி வழங்கியுள்ளது.
ஆதார் செயலி வாயிலாக மட்டுமே வழங்கப்படும் இந்த வசதி கட்டணமில்லாத சேவையாகும். இந்த வசதி, 2026 ஜூலை 1 முதல் ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும். மக்கள் தங்களின் ஆதார் தகவல்களை எளிதாக புதுப்பிப்பதற்கு இது வகை செய்கிறது. மையங்களுக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்க்கும் வகையில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் நோக்கில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக மக்களுக்கு, டிஜிட்டல் சேவையை வழங்குவதற்கான ஆணையத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த முயற்சி எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
ஆதார் செயலியில் புதிய சேவை கிடைத்த இரண்டு நாட்களுக்குள், 2,50,000 பேர் தங்களது மின்னஞ்சல் முகவரியை புதுப்பித்துள்ளனர். ஆதார் எண்ணுடன் மின்னஞ்சல் முகவரியை இணைப்பதன் மூலம், ஆதார் அங்கீகாரக் கோரிக்கை செயல்படுத்தப்படும் போது நிகழ்நேர மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெற உதவுகிறது.
இது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன், ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண் எந்த நோக்கத்திற்காக பயன்படுகிறது என்பது குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ள உதவுவதன் மூலம் கூடுதல் பாதுகாப்பையும் வழங்குகிறது.
வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஆதார் செயலி, மக்கள் தங்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து நேரடியாக மொபைல் எண் புதுப்பித்தல், முகவரி புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு உதவுகிறது.
இதுவரை, 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புதிய ஆதார் செயலியைப் பயன்படுத்தி, தங்களது மொபைல் எண்களைப் புதுப்பித்துள்ளனர். அதே நேரத்தில், ஒரு மில்லியன் மக்கள் தங்களது முகவரியைப் புதுப்பிக்க இந்த செயலியைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆதார் எண்ணுடன் மின்னஞ்சல் முகவரியைச் சேர்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும், அதன் பலன்களைப் பெறுவதற்கும் இந்திய தனித்துவ அடையாள மேம்பாட்டு ஆணையம் மக்களை ஊக்குவிக்கிறது. ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து அல்லது புதுப்பிப்பதன் மூலம், மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிப்பதற்கான வசதியைப் பெற முடியும்.
திவாஹர்
