இந்தியாவின் எரிசக்தி மாற்றம் மற்றும் தன்னிறைவுக்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, நிலக்கரி அமைச்சகம் இன்று நான்கு நிலக்கரிச் சுரங்கங்களுக்காக வெற்றிகரமான ஏலதாரர்களுடன் நிலக்கரிச் சுரங்கம்/தொகுதி உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தங்களை (CMDPA) மேற்கொண்டது. இதன் மூலம், நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கத்திற்கான (UCG) உள்ளமைக்கப்பட்ட விதிகளைக் கொண்ட இந்தியாவின் முதல் வணிக நிலக்கரிச் சுரங்கங்களின் தொகுதியாக இது அமைகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, இந்தியா தனது பரந்த நிலக்கரி இருப்புகளின் முழு மதிப்பையும் எவ்வாறு அணுகி வெளிக்கொணர்கிறது என்பதில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் பாய்ச்சலைக் குறிக்கிறது.
வர்த்தக நிலக்கரிச் சுரங்க ஏலங்களின் 14வது சுற்றின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ரெச்சர்லா மற்றும் சிந்தல்புடி செக்டர் ஏ1 சுரங்கங்களையும், ஆக்சிஸ் எனர்ஜி வென்ச்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெல்பஹார் மற்றும் தங்கார்திஹி கிழக்கு நிலக்கரிச் சுரங்கங்களின் டிப் விரிவாக்கப் பகுதியையும் கைப்பற்றின. இந்தச் சுரங்கங்கள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பரவியுள்ளன; இவற்றில் இரண்டு பகுதியளவு ஆராயப்பட்ட சுரங்கங்களாகவும், இரண்டு முழுமையாக ஆராயப்பட்ட சுரங்கங்களாகவும் உள்ளன.
UCG என்பது நிலக்கரி பயன்பாட்டிற்கான ஒரு புரட்சிகரமான அணுகுமுறையாகும் — இது வழக்கமான சுரங்க முறைகளின் தேவையின்றி, நிலக்கரிப் படுகைக்குள்ளேயே நேரடியாக செயற்கை வாயுவாக மாற்றுகிறது. இந்தத் தொழில்நுட்பம், பாரம்பரிய பிரித்தெடுப்பு முறைகளால் பொருளாதார ரீதியாக அணுக முடியாத ஆழமான, மெல்லிய அல்லது வேறுவிதமாகப் பயன்படுத்த முடியாத நிலக்கரிப் படுகைகளிலிருந்து ஆற்றலை வெளிக்கொணர்ந்து, இந்தியாவின் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் வள ஆதாரத்தை கணிசமாக விரிவுபடுத்துகிறது. முதல் முறையாக CMDPA-க்களில் UCG விதிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், நிலக்கரி அமைச்சகம் இந்தச் சுரங்கங்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்துள்ளது. இது, சுரங்க இயக்குநர்கள் வழக்கமான பிரித்தெடுப்புடன், தூய்மையான மற்றும் திறமையான ஆற்றல் உற்பத்திக்கான இந்த அதிநவீன பாதையைப் பின்பற்ற வழிவகுக்கிறது.
யுசிஜி (UCG) விதிகளை அறிமுகப்படுத்துவது, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நிலக்கரி கொண்டிருக்கும் வழிப்பொருட்களின் ஆற்றல்களுக்கு மாற்றாக நிலக்கரியைப் பயன்படுத்துவதன் மூலம் நிலக்கரிப் பொருளாதாரத்திற்கு மதிப்புக்கூட்டலைச் சேர்ப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. யுசிஜி மூலம் உற்பத்தி செய்யப்படும் சின்கேஸ், யூரியா மற்றும் அம்மோனியா உற்பத்திக்கான உள்நாட்டு மூலப்பொருளாகப் பயன்பட முடியும். இது இறக்குமதி செய்யப்படும் உரங்கள் மீதான இந்தியாவின் சார்புநிலையைக் கணிசமாகக் குறைத்து, உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும். இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய இரசாயனங்கள் துறையில், யுசிஜி சின்கேஸ், இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு மற்றும் நாஃப்தாவிற்குப் பதிலாக அடிப்படை மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படலாம். இது மெத்தனால், டைமெத்தில் ஈதர் (DME) மற்றும் செயற்கை எரிபொருட்களின் உள்நாட்டு உற்பத்தியைச் சாத்தியமாக்கும்.
இந்த நான்கு CMDPA-க்களுடன், வணிக நிலக்கரி ஏலங்களின் கீழ் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் மொத்த எண்ணிக்கை 138 சுரங்கங்களை எட்டியுள்ளது. இது, ஆண்டுக்கு 331.544 மெட்ரிக் டன் என்ற உச்சபட்ச மதிப்பிடப்பட்ட திறனை உள்ளடக்கியுள்ளது. இந்த 138 சுரங்கங்கள், ஆண்டுக்கு சுமார் ₹42,980 கோடி வருவாயை ஈட்டும் என்றும், ₹48,231 கோடி மூலதன முதலீடுகளை ஈர்க்கும் என்றும், மேலும் சுமார் 4,34,175 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையான, முதலீட்டாளர்களுக்கு உகந்த ஏல செயல்முறைகள் மூலம் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சமூக-பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும் நிலக்கரி அமைச்சகம் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், உலகளாவிய எரிசக்தித் துறையில் இந்தியாவை முன்னணிக்குக் கொண்டுவருவதற்காக UCG போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களையும் அது ஏற்றுக்கொள்கிறது.
திவாஹர்
