இந்தியாவின் துடிப்பான வடகிழக்குப் பிராந்தியத்தில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் நேற்று (2025 ஏப்ரல் 15) புதுதில்லியில் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தூதர்களும், உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு வடகிழக்கு பிராந்தியத்தின் (என்.இ.ஆர்) மகத்தான திறனை வெளிப்படுத்துவதையும், நிலையான வளர்ச்சிக்கான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.
தூதர்கள் கூட்டத்தில் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா கலந்து கொண்டார். அவர் பொருளாதார ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் இந்த பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். வடகிழக்குப் பிராந்தியத்தை போக்குவரத்து இணைப்பு, வர்த்தகம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் மையமாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார். வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள எட்டு மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் தனித்துவமான சிறப்புகளும், வாய்ப்புகளும் இருப்பதாகவும், இது இந்தியாவுக்கு விலைமதிப்பற்ற சொத்து எனவும் அவர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் பேசிய வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் தமது உரையில், வடகிழக்கு பிராந்தியத்தின் அபரிமிதமான வாய்ப்புகளை எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நடவடிக்கைகள் காரணமாக, வடகிழக்கு மாநிலங்கள் முதலீட்டு வாய்ப்புகளுக்கான சிறந்த இடங்களாக மாறி வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு பிராந்தியத்தின் தனித்துவமான வலிமை குறித்து இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
வெளியுறவு அமைச்சர் திரு எஸ் ஜெய்சங்கர் காணொலி மூலம் உரையாற்றினார். இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கைகளில் வடகிழக்கு பிராந்தியம் முன்னணியில் உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாநிலங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திவாஹர்
