தடுப்பூசிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கியூஆர் குறியீடு அடிப்படையிலான மருந்து கண்காணிப்பு முறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மருந்து விநியோக நடைமுறைகளின் தரம், பாதுகாப்பு, நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் வகையில், அட்டவணை எச்2-ன் கட்டுப்பாடு வரம்பை விரிவுபடுத்தவும், கூடுதல் வகை மருந்துகளை கியூஆர் குறியீடு அடிப்படையிலான கண்காணிப்பு, தடமறியும் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரவும், மருந்து விதிகள், 1945-ல் தேவையான திருத்தங்களைச் செய்வதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தத் திருத்தியமைக்கப்பட்டுள்ள விதிகளின்படி, அனைத்து தடுப்பூசிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், போதைப்பொருள், மனநலன் சார்ந்த மருந்துகள் (என்டிபிஎஸ் சட்டம், 1985-ன் கீழ் வருபவை), அனைத்து வகை புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளும், மருந்து விதிகள், 1945′-ன் அட்டவணை எச்2-ல் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தத்தின் மூலம், இத்தகைய மருந்து வகைகளை உற்பத்தி செய்பவர்கள், தயாரிப்பின் முதன்மை பேக்கேஜிங் லேபிளிலோ அல்லது போதிய இடவசதி இல்லாத பட்சத்தில் இரண்டாம் நிலை பேக்கேஜிங் லேபிளிலோ ‘பார்கோடு’ அல்லது ‘விரைவு பதில் குறியீடு’ ஆகியவற்றை அச்சிடவோ அல்லது ஒட்டவோ வேண்டும். விநியோக நடைமுறைகள் அனைத்திலும் தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் சரிபார்க்கவும் உதவிடும் வகையில், மென்பொருள் செயலிகள் மூலம் எளிதாகப் பெறக்கூடிய தகவல்களை இந்தக் கியூஆர் குறியீடு கொண்டிருக்கும்.

இந்தக் கியூஆர் குறியீட்டில் தனித்துவ தயாரிப்பு அடையாளக் குறியீடு, பொதுவான பெயர், வணிகப் பெயர், தயாரிப்பாளரின் பெயர், முகவரி, தொகுதி எண், தயாரிப்பு, காலாவதியாகும் தேதி, தயாரிப்பு உரிம எண், பொருந்தக்கூடிய இடங்களில் துணைப் பொருட்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தொழில்துறை, இதர தரப்பினருக்குப் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான காலக்கெடுவை அமைச்சகம் பகுதி வாரியாக நிர்ணயித்துள்ளது. தடுப்பூசிகள், போதைப்பொருள், மனநலனைப் பாதிக்கும் மருந்துகள், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான விதிமுறைகள் 2027 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது என்றும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான விதிமுறைகள் 2028 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற மத்திய அரசின் முன் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில், என்டிபிஎஸ் மருந்துகளின் விநியோக நடைமுறைகளைக் கண்காணிக்கவும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இது உதவிடும்.

Leave a Reply