உலகின் வளர்ச்சிக்காக ‘பிரிக்ஸ் விண்வெளிப் பொருளாதாரம்’: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

பெங்களூருவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் விண்வெளி முகமைகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தின் நிறைவு விழாவில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். அப்போது, உலகின் வளர்ச்சிக்கு ‘பிரிக்ஸ் விண்வெளிப் பொருளாதாரம்’ என்ற ஒருங்கிணைந்த முன்னெடுப்பு குறித்து அவர் பேசினார். புதிய முதலீடுகள், புத்தொழில் நிறுவனங்கள், நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்க பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

பிரிக்ஸ் நாடுகள் விண்வெளித் துறையில் உலகளாவிய சக்தியாக உருவெடுப்பதற்கான அறிவியல் திறன்களையும், தொழில்நுட்ப பலத்தையும் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். விண்வெளிப் பொருளாதாரத்தின் எதிர்காலம் தனித்த செயல்பாடுகளால் அல்லாமல், கூட்டு முயற்சிகள், பகிரப்பட்ட கண்டுபிடிப்புகள் மூலமே சாத்தியமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) நடத்தப்பட்ட இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் விண்வெளி முகமைத் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விண்வெளி நிலைத்தன்மை, குப்பைகளற்ற விண்வெளிப் பயணங்கள், பிரிக்ஸ் விண்வெளி கவுன்சில் அமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, விண்வெளித் துறையில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் தனியார் துறையினருக்கும், புத்தொழில் நிறுவனங்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சந்திரயான்-3, ஆதித்யா-எல்1 போன்ற இந்தியாவின் சாதனைகள் சர்வதேச ஒத்துழைப்பிற்கு புதிய வழிகளைத் திறந்துள்ளதாகக் கூறிய அவர், பிரிக்ஸ் நாடுகள் ஆலோசனைகளைக் கடந்து, கூட்டு மேம்பாடு, கூட்டு கண்டுபிடிப்புகளை நோக்கி நகர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply