கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் விநியோகம் செய்வதற்காகவே புதிதாக பதிப்பகங்கள் தொடங்கப்பட்டதாகவும், தொழில்நுட்பத் தரம் குறைந்த செயற்கை நுண்ணறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர்கள் போலியானவை என்றும், புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் (ISBN) மற்றும் பதிப்பக முகவரிகள் போலியானவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். சில நூல்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நூலகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றிருந்தால், அது மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை வாசகர்களுக்குத் தவறான தகவல்களைக் கொண்டு சேர்க்கும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளார்.
எனவே, பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் அல்லது ஊழல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் ஆய்வு செய்து, தவறான தகவல்கள் கொண்ட நூல்களை அகற்றுவதுடன், தரமான மற்றும் நம்பகமான நூல்களை மட்டும் இருப்பில் வைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
