கடல்சார் பாதுகாப்பில் பிராந்திய நட்புறவு நாடுகளுக்கிடையேயான சார்ந்திருத்தலை வலுவானதாக மாற்ற வேண்டும் !- பாதுகாப்பு அமைச்சர்.

உலகளாவிய கடல்சார் பாதுகாப்புச் சூழலில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் நம்பகமான கடல்சார் உள்கட்டமைப்பு, மேம்பட்ட கடல்சார் விழிப்புணர்வு, அதிக ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலமும், தடைகளை முன்கூட்டியே கணித்து, மீண்டு வரும் திறனுடனும் பிராந்திய நட்புறவு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர சார்ந்திருத்தலை மிகவும் பாதுகாப்பானதாகவும் வலுவானதாகவும் மாற்ற வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். 2026 நவம்பர் 4, அன்று புது தில்லியில் நடைபெற்ற இந்திய கடற்படையின் வருடாந்திர உயர்மட்ட சர்வதேச உத்திசார் மாநாடான இந்தோ-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடல்கள் என்பவை நாடுகள் மற்றும் நாகரீகங்களுக்கு இடையிலான தடைகள் அல்ல என்றும், அவை பாலங்கள் என்றும் வர்ணித்த பாதுகாப்புத் துறை அமைச்சர், வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதிலும், பொருட்கள், அறிவு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை எளிதாக்குவதிலும் அவற்றின் பங்களிப்பை எடுத்துரைத்தார். இந்த உலகளாவிய சார்புநிலைகள் குறித்து சர்வதேச சமூகம் அறிந்திருந்தபோதிலும், சில அமைப்புகளும் நாடுகளும் தங்களின் குறுகிய தனிப்பட்ட நன்மைகளுக்காக கடல்களின் முக்கியத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். வேண்டுமென்றே செய்யப்படும் வர்த்தக இடையூறுகளால் உலகளாவிய கடல்சார் பாதுகாப்புச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்  தடையற்ற கடற்பயணத்திற்கான சவால்களையும், குறுகிய கடல் வழிகள் ஆயுதமாக்கப்படுவதையும் காண முடிவதாக அவர் தெரிவித்தார். கடல்சார் களத்தில் அதிகரித்து வரும் இந்த நிலையற்ற தன்மை, பரந்த சர்வதேச கட்டமைப்பின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு இடையூறுகளையும் எதிர்கொள்ள உலகமயமாக்கலைக் கைவிட முடியாது என்றும், மனித சமூக முன்னேற்றத்திற்கு உதவிய கடல்சார் வெளிகளை மூடிவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply