இந்தியா – மெக்சிகோ இடையே வர்த்தகம், முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியா – மெக்சிகோ இடையே புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கான வரையறைகளில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்மூலம் இரு நாடுகளும் தங்களுடைய பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒரு முக்கிய அடித்தளத்தை அமைத்துள்ளன.

இந்த கையெழுத்தின் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், வணிக வாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும், பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடிய, சமநிலையான, முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை முறைப்படி தொடங்குகிறது.

2025 ஜூன் மாதம் கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, அதிபர் டாக்டர் கிளாடியா ஷெயின்பாம் ஆகியோரின் சந்திப்பின்போது, இந்தியா –  மெக்சிகோ இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த, இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதையடுத்து இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தகத்துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வாலின் பயணத்தின்போது இரு நாட்டு பிரதிநிதிகளும் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.

இந்த ஒப்பந்தத்தின் வரையறைகள் பொருட்களுக்கான சந்தை அணுகல், விதிமுறைகள்,  சுங்க நடைமுறைகள், வர்த்தகத்தை எளிதாக்குதல், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள், தீர்வுகள் உட்பட முக்கிய பேச்சுவார்த்தை அம்சங்களை உள்ளடக்கியுள்ளன.

இந்த பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்தம் மூலம், இருநாட்டு பொருளாதாரங்களுக்கு இடையேயான நட்புறவை பயன்படுத்தி இந்திய சந்தையில் மெக்சிகோ தயாரிப்புகள், வணிகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு மெக்சிகோ ஒரு முக்கிய சந்தையாகும். வாகன உற்பத்தித் துறை, ரசாயனம், மின்னணுப் பொருட்கள், மருந்துத்துறை, வேளாண் உணவு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், மருத்துவ உபகரணங்கள், மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பிற்கான பெரும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

Leave a Reply