இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்புத் தயார்நிலைக்கு ஆபரேஷன் சிந்தூர் சான்றாகும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசின், ‘தேசமே முதன்மை’ மற்றும் ‘படைகளே முதன்மை’ என்ற உணர்வின் வழிகாட்டுதலுடன், கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளால் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இந்தியாவின் நவீன, நேர்த்தியான மற்றும் தரமான பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் கூர்மையாக்கியுள்ளன என்பதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு சான்றாகும்,” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்திற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்த இந்தியப் பாதுகாப்புப் படைகளின் இணையற்ற வீரியத்திற்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு நினைவூட்டலாக அமைந்துள்ளது என்றும், இது பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் தெளிவான ‘சகிப்புத்தன்மையற்ற’ நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்றும் விவரித்தார். ‘பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற நிலைப்பாடு’ என்பது வெறும் அறிக்கை மட்டுமல்ல, அது ஒரு செயல் திட்டம் என்றும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதத்தை அதன் எல்லைக்குள் மட்டுமல்லாமல், அது செயல்படும் இடத்திற்குள் நுழைந்தும் தாக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தியாவின் மாற்றியமைக்கப்பட்ட பாதுகாப்புத் துறை, ஆபரேஷன் சிந்தூர் போன்ற ஒரு சிக்கலான நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதாக அவர் கூறினார். மேலும், இது தொழில்நுட்பப் போரின் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாகவும், இந்தியத் தொழில்களின் மீதான அரசின் நம்பிக்கைக்குச் சான்றாகவும் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூரின் போது, ஆகாஷ் தீர், ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, பிரம்மோஸ் போன்ற மேம்பட்ட அமைப்புகளும், பல்வேறு நவீன உபகரணங்களும் திறம்படப் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply