இந்தியா-ஆஸ்திரேலியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு.

ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது வருடாந்திர உச்சிமாநாட்டில் இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் மிக முக்கிய சாதனையாக இரு நாடுகளுக்கும் இடையிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தின் கீழ் நிர்வாக ஏற்பாடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு அமைதி வழிமுறையில், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்காக ஆஸ்திரேலிய யுரேனியத்தை இந்தியாவிற்கு நீண்டகால அடிப்படையில் ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள யுரேனியத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான யுரேனிய இருப்பை கொண்டுள்ள ஆஸ்திரேலியாவிடமிருந்து தடையற்ற யுரேனியம் கிடைப்பது இந்தியாவின் விரிவடைந்து வரும் அணுசக்தித் திட்டத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இந்தியாவின் நீண்டகால தூய்மை எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பெரிதும் துணையாக இருக்கும். குறிப்பாக 2047-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ள தேசிய அணுசக்தி இயக்கத்தின் இலக்குகளுக்கு இது பெரும் உந்துசக்தியாக அமைகிறது. மேலும் அணு மின் நிலையங்களை அமைத்தல், இயக்குதல் போன்ற பணிகளில் இந்தியத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இயற்றப்பட்ட சாந்தி சட்டத்தின் நோக்கங்களை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்துகிறது. தடையற்ற நீண்டகால யுரேனிய விநியோகம், திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்துவதற்கு முதலீட்டாளர்களுக்கும் தொழில்துறையினருக்கும் கூடுதல் ஊக்கமளிக்கும்.

இந்தியா தற்பொழுது 24 அணு உலைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இவற்றின் மூலம் ஒட்டுமொத்தமாக 8.78 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 8000 மெகாவாட் கூடுதல் திறன் கொண்ட பத்து புதிய அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் சிறிய அணு உலைகளின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாட்டுப் பணிகளுக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் 20,000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இத்தகைய அணு உலைகளை வரும் ஆண்டுகளில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அணுசக்திப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாக கல்பாக்கத்தில் அமைந்துள்ள 500 மெகாவாட் முன்மாதிரி அதிவேக ஈனுலை அண்மையில் தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த அணு உலை நாட்டின் முப்பரிமாண அணுசக்தித் திட்டத்தின் இரண்டாவது கட்டத் தொடக்கத்தைக் குறிக்கிறது.

அணுசக்தித் துறையில் இந்தியாவின் தூய்மையான, பொறுப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச அமைப்பான அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு ஆஸ்திரேலியா மீண்டும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய எரிசக்தி கூட்டாண்மை இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன் 2070-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும். இனிவரும் காலங்களில் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதில் இந்த அணுசக்தி ஒப்பந்தம் மிக முக்கியப் பங்காற்றும். இத்தகைய புதிய உத்திகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன் நாட்டின் தூய்மையான, பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Leave a Reply