நாக்பூரில் நடைபெற்ற பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், போக்குவரத்து அமைச்சர்கள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், 3-வது பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் நிறைவடைந்தது. இது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே போக்குவரத்து ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. 2026 ஜூலை 11 அன்று தொடங்கிய அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, 2026 ஜூலை 9-10 தேதிகளில் 3-வது பிரிக்ஸ் போக்குவரத்து பணிக்குழுவின் மூத்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், மூத்த அதிகாரிகள், அமைச்சர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அமைச்சர்கள் பிரகடனத்தையும் இறுதி செய்தனர்.

அமைச்சர்கள் கூட்டத்தின் நிறைவாக, உட்கட்டமைப்பில் சுழற்சிப் பயன்பாடு, நிலையான விமான எரிபொருள், போக்குவரத்து கரியமில வாயு வெளியேற்றக் குறைப்பு, நகர்ப்புற போக்குவரத்து மையம், சரக்குப் போக்குவரத்து விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பு, பிரிக்ஸ் ரயில்வே ஆராய்ச்சி கட்டமைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான பகிரப்பட்ட கருத்துக்களும் கட்டமைப்பும் அமைச்சர்கள் பிரகடனத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியா தலைமையிலான பிரகடனத்திற்கு, ஆதரவளித்த தூதுக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைவதற்கு வழிவகுத்த, அனைத்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பங்களிப்புகளுக்கு இந்தியா தனது பாராட்டைத் தெரிவித்தது. மேலும், இந்த முன்முயற்சிகளை அடுத்த பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பிற்குச் சுமூகமாக மாற்றுவதை உறுதி செய்வதில் தனது உறுதிப்பாட்டையும் இந்தியா எடுத்துரைத்தது.

இந்தக் கூட்டம் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்தது. மூத்த அதிகாரிகள் கூட்டம், போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம், இருதரப்பு சந்திப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நான்கு நாள் நிகழ்ச்சியில், பிரிக்ஸ் நாடுகளின் வளமான பன்முகத்தன்மையை வெளிக்காட்டும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இது, பங்கேற்ற குழுக்களிடையே பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும், மக்களுக்கிடையேயான தொடர்பை வளர்க்கவும், தனிநபர்களுக்கிடையேயான, நிறுவன ரீதியான உறவுகளை வலுப்படுத்தவும் ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கியது.

Leave a Reply