இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லாவில் இந்திய உயர்நிலை ஆய்வு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வந்தே மாதரத்தின் பயணம் குறித்த நிரந்தர கண்காட்சியையும், ஒருமைப்பாடு, ஒற்றுமை, கூட்டாட்சி ஆகியவற்றில் சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வை குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கையும் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (10.07.2026) காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த ஆண்டு என இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை தேசம் கொண்டாடுவதாக குடியரசு துணைத்தலைவர் கூறினார். இத்தகைய நிகழ்வுகள் வரலாற்றை நினைவுபடுத்தி கொள்வதற்கு மட்டுமின்றி, அதன் ஆன்மாவோடு மீண்டும் நம்மை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய கண்டுபிடிப்புகள், ஒரு நாட்டை வளப்படுத்தும் அதேசமயத்தில் சிந்தனைகள்தான் ஒரு நாட்டை உண்மையில் மகத்தானதாக மாற்றுகிறது என்று அவர் கூறினார். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் வந்தே மாதரம் பாடலின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், இந்த தேசிய பாடல், சுதந்திர இந்தியா என்ற பகிரப்பட்ட கனவின் மூலம் பிராந்தியங்கள், மொழிகள், நம்பிக்கைகள், சமூக பின்னணிகள் கடந்து மக்களை ஒன்றுபடுத்தியது என்றார். வந்தே மாதரம் பாடல் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு துணிவு, தியாகம், நம்பிக்கை ஆகியவற்றின் உந்துசக்தியாக மாறியது. தாய்நாட்டின் மீதான நேசத்தை புனிதமான தேசிய கடமையாகவும் மாற்றியது என்று அவர் தெரிவித்தார்.
சர்தார் வல்லபாய் படேலுக்கு புகழாரம் சூட்டிய குடியரசு துணைத்தலைவர், தேசம் பிறப்பதற்கு வந்தே மாதரம் ஊக்கமளித்தது என்றால், சர்தார் படேல் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை ஒன்றுபட்ட குடியரசுக்குள் இணைத்தார் என்று குறிப்பிட்டார். சர்தார் படேல் நிலப்பகுதிகளை மட்டும் இணைக்கவில்லை, இந்தியர்களின் இதயங்களையும் இணைத்து ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம், ஒரே இலக்கு என்பதற்கு அடிக்கல் நாட்டியதாக குடியரசு துணைத்தலைவர் திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா
