பருத்திக்கு அதிகரித்து வரும் உள்நாட்டு, சர்வதேச தேவையை பூர்த்தி செய்ய தயாராக இருக்க வேண்டும்!-குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்.

பருத்தி உற்பத்தித்திறன் இயக்கம் குறித்து குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் இன்று (07.07.2026) குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஜவுளி அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இணைந்து விளக்கமளித்தனர்.

இந்த விளக்கவுரையில், ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய முறைகள் மூலம் பருத்தி உற்பத்தித்திறனை அதிகரித்தல்; கஸ்தூரி பருத்திச் சான்றிதழ் மற்றும் கிசான் கபாஸ் செயலி போன்ற முன்னெடுப்புகள் மூலம் உயர்தரப் பருத்தியின் சீரான விநியோகத்தை உறுதி செய்தல்; ஜவுளித் துறையில் புத்தாக்கத்தையும் நிலைத்தன்மையையும் ஊக்குவிப்பதற்காக நவீன கால இயற்கை இழைகளை மேம்படுத்துதல் என திட்டத்தின் மூன்று முக்கியக் கூறுகள் இடம்பெற்றிருந்தன.

இந்தியாவின் பருத்திச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தத் திட்டத்தின் முழுமையான அணுகுமுறையைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், புத்தாக்கத்தை விரைவுபடுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் ஏற்றுக்கொள்வதை எளிதாக்குவதற்கும் காலவரையறைக்குட்பட்ட ஒப்புதல் வழிமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தினார். ஒரு ஏக்கருக்கான பருத்தி விளைச்சலை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் முன்னணி பருத்தி உற்பத்தி நாடுகளுடனான இடைவெளியைக் குறைப்பதற்கும் தெளிவான, அளவிடக்கூடிய இலக்குகளை அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.

உலகளாவிய போட்டித்திறனை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்றும், தரமான பருத்திக்கு அதிகரித்து வரும் உள்நாட்டு, சர்வதேச தேவையை பூர்த்தி செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார். இந்தத் திட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சந்தைக்கு ஏற்ற உத்திகளைக் கையாள்வது, வெற்றிகரமான முன்னெடுப்புகளை தொலைக்காட்சி ஆவணப்படங்கள் மூலம் முன்னிலைப்படுத்தி பரவலாகக் கொண்டு சேர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

Leave a Reply