தமிழ்நாட்டிற்கு மேகதாது அணையில் இருந்து கிடைக்கக்கூடிய தண்ணீர் தடையில்லாமல் காலத்தே கிடைக்க வேண்டும் என்பதே நியதி.
ஆனால் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை காலத்தே திறந்துவிடுவதில்லை.
மேலும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டி தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை தருவதில் தடை ஏற்படுத்த முயற்சிப்பதும் ஏற்புடையதல்ல.
அதாவது கர்நாடக அரசு காவிரி ஆற்று நீரை மேகதாது அணையின் மூலம் உரிய காலத்தில் தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டால் தான் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயம் நடைபெற ஏதுவாக இருக்கும்.
இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கேட்டு மத்திய அரசை நாடியதும் முறையல்ல.
காரணம் ஏற்கனவே நடுவர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மேகதாது அணைகட்டுவது சம்பந்தமாக தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் ஈடுபடக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு தெளிவாக தெரிவித்திருக்கிறது.
இச்சூழலில் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாது அணைகட்ட நிதி ஒதுக்கி, அளவீட்டுப் பணிகளை தொடங்கி, கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்வதாக தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே தமிழக அரசு கர்நாடக அரசின் அத்துமீறிய இச்செயலை நீதிமன்றத்தின் வாயிலாக முடக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
மேலும் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மேகதாது அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டுக்கு தமிழ்நாட்டின் ஒருமித்த எதிர்ப்பை தெரிவிப்பதோடு, மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டின் நியாயத்தை எடுத்துரைத்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, மக்களுக்கான குடிநீரை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
