புதுதில்லியில் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். மேலும் தில்லி அரசின் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். தில்லியை மேம்படுத்துவதற்கான பெரும் திட்டத்தின் கீழ், 300 மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தையும் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 பேருந்து பனிமணைகளையும் 40 வாகன பரிசோதனை மையங்களையும் தொடங்கி வைத்தார். நரேலாவில் உயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் ரிட்ஜ் எனப்படும் வனப்பகுதியை மீட்பதற்கான இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, தில்லி ரிட்ஜ் பகுதியில் பல்வேறு நச்சுத்தன்மை வாய்ந்த முட்கள் நிறைந்த மரங்கள் காணப்படுவதாகக் கூறினார் அவற்றைப் பார்க்கும் போது தில்லி பசுமையாக இருப்பதைப் போன்று தோன்றினாலும் நமது சுற்றுச்சூழலுக்கு உகந்ததது அல்ல என்று அவர் தெரிவித்தார். 1994-ம் ஆண்டில் தில்லியின் ரிட்ஜ் பகுதியில் 7784 ஹெக்டேர் நிலம் இந்திய வனச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான இறுதி அறிவிக்கை 30 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்ததாகக் கூறினார். இந்நிலையில் நேர்மறையான நடவடிக்கை மூலம் அப்பகுதியில் 5,000 ஹெக்டேர் நிலம் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
ரிட்ஜ் பகுதிக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் அப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் மண், நீர், தில்லியின் சுற்றுச்சூழல் ஆகியவை புதிய வடிவம் பெறும் என்று திரு அமித் ஷா கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
