கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் அணுக்கனிமங்கள் (Atomic Minerals) எடுப்பதற்காக மத்திய அரசின் IREL நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட 1,144 ஹெக்டேர் நில ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் இதற்கு எதிராக உள்ளூர் மக்களும், கடலோர பகுதி மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அணுக்கனிம சுரங்கம் அமையவுள்ள பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் ஏற்படலாம்’ என்றும், ‘மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்’ என்றும் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இத்திட்டத்தின் பாதகமானது முழுமையாக கடலோர கிராம மக்களைப் போய்ச் சேரும். அவர்களின் வாழ்வாதாரம், உடல்நலன், கடலோர சூழல் பாதிக்கும்.
நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், விவசாயம், மக்கள் அரோக்கியம் ஆகியவற்றிற்கு பாதிப்பை விளைவிக்கும் இத்திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்திற்கு தமிழக அரசு அறிவித்த நீட்டிப்பை அப்பகுதி மக்களின் நலன் சார்ந்து தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தமிழக அரசு அணுக்கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக மக்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்று செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
