மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், இன்று (04.07.2026) அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலை வாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் எனப்படும் விபி-ஜி-ராம் ஜி திட்டத்தின் செயலாக்கத்தை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தின் போது, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ₹25,863 கோடி மதிப்பிலான முதல் தவணையை அவர் விடுவித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சௌகான், 2026 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் விபி-ஜி-ராம்-ஜி திட்டத்தை எவ்வித இடையூறும் இன்றி செயல்படுத்த அரசு தீர்மானித்ததைச் சுட்டிக் காட்டினார். அதன்படி இத்திட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலிருந்து (MGNREGA) விபி-ஜி-ராம்-ஜி திட்டத்திற்கு மாறும் செயல்முறை சுமுகமாகவும் தடையின்றியும் நடைபெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். இதில் இதுவரை, எந்தவொரு தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டுச் சிக்கல்களும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
ஏழைத் தொழிலாளர்களுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் சேவை செய்வதைப் போன்றது என்று அவர் கூறினார். கிராமப்புறத் தொழிலாளர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்பு, சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், நிலையான கிராமப்புறச் சொத்துக்களை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்த கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், விபி-ஜி-ராம்-ஜி திட்டம் ஒரே நாளில் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று திரு சௌகான் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமை, மாநிலங்களின் ஒத்துழைப்பு, நாட்டின் நிர்வாகத் திறன் ஆகியவற்றால் சாத்தியமான ஒரு மாபெரும் சாதனை இது என அவர் விவரித்தார். இது பிரதமரின் அர்ப்பணிப்பு, நல்லாட்சி, திறமையான ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஆரம்பகட்ட முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட அமைச்சர், முதல் வாரத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கிராமப் ஊராட்சிகளில் பணிகள் தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கான கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். முதல் நாளிலேயே அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய ஆந்திரப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை அவர் பாராட்டினார். மீதமுள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் விரைவில் பணிகளைத் தொடங்குமாறு ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களை அவர் வலியுறுத்தினார். இத்திட்டத்தை அறிவித்து, தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் செய்யுமாறு ஜார்க்கண்ட் மாநிலத்தை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
விபி-ஜி-ராம்-ஜி திட்டத்தின் கீழ் ஊதிய விகிதங்கள் சராசரியாக சுமார் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இனி நாட்டின் எந்த மாநிலத்திலும் ஒரு நாளுக்கான ஊதியம் ₹300-க்குக் குறைவாக இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், மாநிலங்களில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்வதற்காகவே இன்று ₹25,863 கோடி முதல் தவணையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.
திவாஹர்
