மகாராஷ்டிர மாநிலம் புனே, ரஞ்சன்கானில் உள்ள ஜபில் நிறுவனத்தின் மேம்பட்ட உயர் தொழில்நுட்ப உற்பத்தி ஆலையை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் 2026 ஜூன் 17 அன்று திறந்து வைத்தார். அப்போது மாநில முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னவிஸ் உடனிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உலகளாவிய முன்னேற்றத்திற்கான சக்தி மையமாக உருவெடுத்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். அதன் உட்கட்டமைப்பை நாட்டிலேயே நிலைநிறுத்தும் வியூகத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் மிகப்பெரிய வளர்ச்சி எந்திரமாக தற்போது மாறியுள்ளதால், இந்தத் தரவு மையங்களுக்கு ஊக்கமளிக்கும் முக்கிய மின்னணு பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதை உறுதி செய்வது, பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஜபில் நிறுவனம், புனேவில் உள்ள தங்களின் நவீன, மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்ப ஆலை மூலம் முக்கிய தரவு மைய பாகங்களைத் தயாரிக்கும். சிறந்த செயல்பாட்டுத் திறனைக் கொண்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் முழுமையாகத் தயாராக உள்ளது குறிப்பிடத் தக்கது.
மின்னணு உற்பத்தித் துறையை தேசியப் பொருளாதாரத்தின் ஒரு முதன்மைத் தூணாக மாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அமைச்சர் பாராட்டினார். இந்த இலக்கு சார்ந்த முன்னெடுப்புகளின் காரணமாக, மின்னணு உற்பத்தித் துறை முன்னேறி, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் மூன்றாவது பெரிய வகையாக உருவெடுத்துள்ளது. மின்னணு பாகங்கள், தயாரிக்கப்பட்ட மின்னணுப் பொருட்கள் மற்றும் உள்ளூர் விநியோகத் தொடர்களை உள்ளடக்கிய புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தச் சூழலமைப்பு, குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதாரப் பலன்களை வெளிக்கொணரத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
திறன் மேம்பாடு, பயிற்சி, திறன் உருவாக்கம், உயர் துல்லிய எந்திர பாகங்கள் தயாரிப்பதற்கான சிறப்புச் சூழல் அமைப்புகள் ஆகியவற்றில் முழுமையாக அரசு முதலீடு செய்யும் என அமைச்சர் உறுதியளித்தார்.
திவாஹர்
