அகமதாபாத் கோட்டத்தில் ரூ.140 கோடி மதிப்பில் கவாச் அமைப்பை நிறுவ ரயில்வே ஒப்புதல்.

ரயில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, குஜராத்தில் உள்ள மேற்கு ரயில்வேயின் அகமதாபாத் கோட்டத்தின் 48 வட்டாரப் பிரிவுகளை உள்ளடக்கிய 598 வழித்தட கிலோமீட்டர்களில் கவாச் பதிப்பு 4.0-ஐ நிறுவுவதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை ரூ.140 கோடி செலவில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே வழித்தடங்களில் எல்டிஇ அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்புடன் கவாச் சேவையை வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் இந்தப் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அகமதாபாத் கோட்டத்தின் சுமார் 702 வழித்தட கிலோமீட்டர்களுக்கு கவாச் பணிக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. தற்போதைய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், கோட்டத்தின் மீதமுள்ள பகுதிகளும் கவாச் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, கோட்டம் முழுவதும் உள்நாட்டு ரயில் பாதுகாப்பு அமைப்பை விரிவாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

கவாச் என்பது ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இது, ரயில்கள், சிக்னலை மீறிச் செல்வதைத் தடுக்கவும், தேவைப்படும்போது தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்தவும், நெருக்கடியான சூழ்நிலைகளில் ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுவதால், ரயில்கள் மோதி, விபத்து ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.

பாதுகாப்பை வலுப்படுத்தவும், ரயில் போக்குவரத்தை நவீனமயமாக்கவும் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரயில்வே தனது கட்டமைப்பு முழுவதும் கவாச் சேவையை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது.

Leave a Reply