இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்திய ஒரு வெற்றிகரமான துறைமுக வருகைக்குப் பிறகு, ஐஎன்எஸ் ஷார்தா 13 ஜூன் 2026 அன்று இலங்கையின் கொழும்பிலிருந்து புறப்பட்டது . இந்தப் பயணத்தில், இலங்கை கடற்படையுடன் தொடர்ச்சியான தொழில்முறை, பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை வீரர்கள் சிறு ஆயுதங்களைக் கையாளுதல், அடிப்படை தீயணைப்பு, முதலுதவி மற்றும் மீட்பு நடைமுறைகளில் பங்கேற்றனர். இந்த வருகையின் போது, இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைப் பகுதி தளபதியான ரியர் அட்மிரல் ஜகத் குமார, கப்பலைப் பார்வையிட்டு அதன் குழுவினருடன் கலந்துரையாடியதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கடல்சார் கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நட்பு ரீதியான விளையாட்டுப் போட்டிகள், தொழில்முறைப் பரிமாற்றங்கள் மற்றும் இரு படைகளுக்கு இடையேயான சந்திப்புகள் ஆகியவை, இரு சேவைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தி, பிணைப்புகளை வலுப்படுத்தின.
துறைமுக வருகையின் போது, ஐஎன்எஸ் ஷார்தாவின் கட்டளை அதிகாரி, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் திரு சந்தோஷ் ஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தப் பயணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த கடல்சார் கூட்டாண்மையை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், மகாசாகர் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தியது .
திவாஹர்
