பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அரசுமுறைப் பயணம்!

பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் திரு. ராபர்ட் ஃபிகோ ஆகியோரின் அழைப்பின் பேரில், 2026 ஜூன் 13 முதல் 18 வரை, அந்த நாடுகளுக்கு, அரசுமுறைப் பயணமாக செல்லவுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில், பிரான்ஸ் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியாவிற்கு வந்திருந்த போது, இரு நாடுகளுடனான நட்புறவை ‘உலகளவில் உத்திசார் ஒத்துழைப்பிற்கான’ சிறப்பு நிலைக்கு உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீஸ் நகரில் அதிபர் மேக்ரானைச் சந்திக்கும் போது, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், பரஸ்பரம் பயனளிக்கும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அந்நாட்டு அதிபருடன் விவாதிக்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நீஸ் நகரில், 2026 ஜூன் 14 அன்று பிரான்ஸ் அதிபர் திரு மேக்ரானுடன் இணைந்து ‘பாரத் இன்னோவேட்ஸ்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு’ என்பதன் பின்னணியில் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்ச்சி, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய புத்தொழில் நிறுவனங்களை சர்வதேச அளவிலான முதலீடுகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவின் உயர்கல்விச் சூழல் அமைப்பிலிருந்து உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இது ஒரு உந்துசக்தியாக அமையும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமது பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு,நீஸ் நகரிலிருந்து, 2026 ஜூன் 14-15 தேதிகளில், அரசுமுறைப் பயணமாக ஸ்லோவாக்கியா நாட்டிற்கு பிரதமர் செல்லவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 1993-ல் ஸ்லோவாக்கியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள வலுவான முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும். பிராட்டிஸ்லாவாவில் அந்நாட்டு அதிபர் பெல்லெக்ரினி, பிரதமர் ஃபிகோ ஆகியோருடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் திரு மோடி தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடனும் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பயணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான இந்தியாவின் உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பு நாடாக ஸ்லோவாக்கியாத் திகழ்கிறது.

ஸ்லோவாக்கியாவிலிருந்து எவியன் நகருக்குச் செல்லும் பிரதமர், 2026 ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அங்கு நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டில், இந்தியாவின் பங்கேற்பு, நட்பு நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கையையும், உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது. ஜி7 மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ச்சியாக 8-வது முறையாக இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில், நாட்டின் வளர்ச்சி குறித்தும், உலகின் தென் பகுதியில் உள்ள வளரும் நாடுகளின் விருப்பங்கள் குறித்தும் இந்தியா விரிவாக எடுத்துரைக்கவுள்ளது.

தமது பிரான்ஸ் பயணத்தை 2026 ஜூன் 18 அன்று பாரிஸில் நிறைவு செய்யவுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அங்கு பிரான்ஸ் அதிபர் திரு மேக்ரானுடன் இணைந்து விவாடெக் 2026 மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். விவாடெக் மாநாடு, ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்பம், புத்தாக்கத்தின் முதன்மையான கூட்டமைப்பாகும். இந்த மாநாட்டில், இந்தியா அமைக்கவுள்ள மாபெரும் அரங்கு, இந்தியா – ஐரோப்பிய நாடுகளின் புத்தாக்கச் சூழல் அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பிற்கான மகத்தான வலிமைக்குப் பொருத்தமான அடையாளமாக இருக்கும். மேலும், பாரிஸில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரைச் சந்திப்பதையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியினர், இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவின் பாலமாக இருந்து வருகின்றனர்.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளில் மேற்கொள்ளும் பயணம், ஐரோப்பா, ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பது போன்றவை, இந்தியாவின் ஈடுபாட்டை வலுப்படுத்தும் என்றும், தொலைதூர நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவிற்கான எல்லையை விரிவுபடுத்துவதில், உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply