தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது.
கடலூர் அருகே புதிதாக நான்கு ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
அதாவது ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துள்ளதால், புதிய கிணறுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இதற்காக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் இந்த எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.
சுமார் ரூ.425 கோடி மதிப்பீட்டில் நான்கு ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனம் முடிவு செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இதற்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது. ஏனென்றால் விவசாயத் தொழிலுக்கும், காடுகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தையும், கடலோர பகுதிகளின் விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீன்பிடித் தொழிலையும் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
எனவே தமிழக அரசு கடலூர் மாவட்டப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க விண்ணப்பித்துள்ள ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
கே.பி.சுகுமார்
