தேர்தல் பிரச்சாரங்களில், ஊடகங்களுக்கு உலகளவில் சிறந்த நடைமுறைகள், புதுமைகள் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
ஜூன் 3, 4, ஆகிய தேதிகளில், புது தில்லியில் உள்ள ‘இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில்’ இந்த மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் உரையாற்றியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், 100 கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களுடன், தடையற்ற தகவல் தொடர்பை உறுதி செய்வதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களுக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்து வருவதாகத் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற மாநிலச் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்களில், வாக்காளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிக அளவில் பங்கேற்றது, தேர்தல் நடைமுறையின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ‘தேர்தல் எழுத்தறிவு மன்றத்தின்’ உறுப்பினர்கள் உள்ளிட்ட 480-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
ஜனவரி 23, 2026 அன்று நடைபெற்ற ‘இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை மாநாட்டில்’ ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘தில்லி பிரகடனத்தின்’ கீழ் திட்டமிடப்பட்டுள்ள இறுதித் துறைசார் அறிக்கைக்குப் பங்களிக்கும் நோக்கில், தேர்தல் மேலாண்மையின் பல்வேறு பரிமாணங்கள் சார்ந்த சர்வதேச அனுபவங்கள், மாதிரித் தரநிலைகள், சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தும், களப்பணியாளர்களுக்குப் பயன்படும் வகையில், உலகளவிலான அறிவுசார் வளங்களை உருவாக்குவதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
ஊடகப் பிரச்சாரங்களில் உள்ள முக்கியப் பிரச்சினைகளான தவறான, உண்மைக்குப் புறம்பான தகவல்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ‘டீப்ஃபேக்’, செயற்கை ஊடகங்கள், வெளிப்படைத் தன்மையற்ற டிஜிட்டல் அரசியல் விளம்பரங்கள், இணையத் தளங்களின் நிர்வாகம் ஆகியவை குறித்த விவாதங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
‘சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனத்தின்’ 2026-ம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும் சூழலில், தில்லி தலைமைத் தேர்தல் அலுவலர் அலுவலகம், இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் மற்றும் தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
திவாஹர்
