இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே குவாண்டம் தகவல் தொடர்பு, போட்டோனிக்ஸ் , குவாண்டம் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, விண்வெளித் தொழில்நுட்பங்கள் மற்றும் டீப்-டெக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் எதிர்காலத்தை நோக்கிய கூட்டாண்மை குறித்து இன்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவில் அதிகாரப்பூர்வப் பயணத்தில் இருக்கும் ஜெர்மனியின் துரிஞ்சியா மாகாண முதல்வர் திரு மரியோ வோக்ட், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்துப் பேசினார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் படைப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவை வரவேற்றுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், போட்டோனிக்ஸ், ஆப்டிக்ஸ் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களில் ஐரோப்பாவின் முக்கிய மையமாகத் திகழும் துரிஞ்சியா மாகாணத்துடன் நீண்ட கால நிறுவன கூட்டாண்மையை ஏற்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டார். இச்சந்திப்பில், தேசிய குவாண்டம் இயக்கம் மற்றும் பாதுகாப்பான குவாண்டம் தகவல் தொடர்பு ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘EuroOGS’ நெட்வொர்க் உள்ளிட்ட ஆப்டிக்கல் தரைக் கட்டுப்பாட்டு நிலையத் தொழில்நுட்பங்கள் குறித்தும், இஸ்ரோ மற்றும் ஜெர்மனி விண்வெளி மையம் இடையேயான விண்வெளித் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இருதரப்பும் விவாதித்தன. இந்திய ஏவுகணைகள் மூலம் இதுவரை 11 ஜெர்மனி செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்த அமைச்சர், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, பூமி கண்காணிப்பு மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார்.
திவாஹர்
