மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மூலம் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் ரூ.3,540 கோடி மதிப்பில், சுமார் 114 கிலோமீட்டர் நீளமுள்ள 4 வழி வெளிவட்டச் சாலைத் திட்டம் அதிவேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகள், சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்தும் விதமாக இந்த பசுமைவழி நெடுஞ்சாலைத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஒட்டுமொத்தமாக 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அதிநவீன பாலம் இப்பிராந்தியத்தின் முக்கிய அடையாளமாக அமையவுள்ளது. இந்த அதிவேக வழித்தடம் உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா நோக்கிச் செல்லும் வாகனங்கள் நகரத்திற்குள் நுழையாமல் செல்ல வழிவகை செய்கிறது. இதனால் பயண நேரம் மிச்சமாவதுடன், எரிபொருள் பயன்பாடும் பெருமளவில் குறையும்.
இச்சாலை ஜபல்பூர் விமான நிலையம், பரேலா, ஷாபுரா, குஷ்னர் உள்ளிட்ட முக்கிய புறநகர்ப் பகுதிகளை இணைக்கிறது. மேலும், பேடாகாட் பளிங்குப் பாறைகள், துவாந்தர் நீர்வீழ்ச்சி, கன்ஹா தேசியப் பூங்கா போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கும், அமர்கண்டக் போன்ற புனிதத் தலங்களுக்கும் ஆன்மீகப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் செல்ல இது உதவும். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இச்சாலையின் கட்டுமானப் பணிகளில் சுமார் 40 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரிச் சாம்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மகா கௌசல் பிராந்தியத்தின் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய பொருளாதார காரணியாக உருவெடுக்கும்.
திவாஹர்
